“தெலங்கானா மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என நம்புகிறோம்” - டி.கே.சிவக்குமார்

By செய்திப்பிரிவு

தெலங்கானா: தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 30-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் கட்சியாக உள்ள பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் போட்டியிட்டன. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த சூழலில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

“தெலங்கானா மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என நம்புகிறோம். நான் மிகவும் உற்சாக மனநிலையில் இருக்கிறேன். நாங்கள் சிறப்பான ஆட்சியை வழங்குவோம். எதிர்க்கட்சிகள் சில (பிஆர்எஸ்) எங்கள் கட்சியின் வேட்பாளர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அது யார் யார் என்பதை எங்கள் கட்சி வேட்பாளர்கள் எங்கள் வசம் தெரிவித்துள்ளனர்.

எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அதை நாங்கள் உறுதி செய்வோம். ஒரு எம்எல்ஏ அல்லது வேட்பாளர் கூட எங்கள் தரப்பில் இருந்து விலகி செல்ல மாட்டார்கள். எதிர்க்கட்சியினரின் அரசியல் வியூகம் என்ன என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் கூட்டாக இணைந்து இந்த தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். அதில் நாங்கள் உறுதியாக இருப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE