நாகார்ஜுன சாகர் அணை பிரச்சினை | ஆந்திரா - தெலங்கானா மோதலால் பதற்றம் - மத்திய அரசு தலையீடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாகார்ஜுன சாகர் அணையில் இருந்து ஆந்திரப் பிரதேச போலீசார் தன்னிச்சையாக தண்ணீர் திறந்ததால், ஆந்திரப் பிரதேசத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மத்திய அரசின் தலையீட்டை அடுத்து மோதல் தணிந்துள்ளது.

கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது நாகார்ஜுன சாகர் அணை. இது தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் எல்லையில் அமைந்துள்ளது. அணையின் பாதுகாப்பு தெலங்கானாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் தொடங்குவதற்கு முன் அதிகாலை 2 மணிக்கு அணை பகுதிக்குச் சென்ற ஆந்திரப் பிரதேசத்தின் 700 போலிசார், வலது கால்வாயைத் திறந்து கிருஷ்ணா நதியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீரை திறந்துவிட்டனர். இதனால், ஆந்திரா மற்றும் தெலங்கானா போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

குடிநீர் தேவைக்காகவே கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் திறக்கிறோம் என்று ஆந்திரப் பிரதேச நீர்ப்பாசனத் துறை அமைச்சர் அம்பதி ராம்பாபு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராம்பாபு, "கிருஷ்ணா நதியின் 66 சதவீத தண்ணீர் ஆந்திரப் பிரதேசத்துக்கு உரியது. 34 சதவீத தண்ணீர்தான் தெலங்கானாவுக்கு உரியது. எங்களுக்கு உரிய தண்ணீரில் ஒரு சொட்டு நீரைக் கூட இதுவரை நாங்கள் பயன்படுத்தவில்லை. எங்கள் பகுதியில் உள்ள கால்வாயை நாங்கள் திறக்கிறோம். அதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது" என தெரிவித்திருந்தார்.

நாகார்ஜுன சாகர் அணையின் வலது கால்வாயில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை ஆந்திரப் பிரதேச போலீசார் திறந்துள்ளதாக தெலங்கானா தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தால், ஆந்திரப் பிரதேசம் - தெலங்கானா இடையே மோதல் ஏற்பட்டதால், இரு மாநில உள்துறை செயலாளர்களுடன் வீடியோ கால் மூலம் பேசிய மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, இரு தரப்பையும் சமாதானப்படுத்தினார்.

மேலும், அணையை சிஆர்பிஎஃப் மேற்பார்வையிடும் என்றும், இரு மாநில ஒப்பந்தப் படி தண்ணீர் திறக்கப்படுவதை அது கண்காணிக்கும் என்றும் அவர் கூறினார். இதனை இரு மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. நாகார்ஜுன சாகர் அணைப் பகுதிக்குச் சென்று வலது கால்வாயை திறந்த ஆந்திரப் பிரதேச போலீசாருக்கு எதிராக தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்ட போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE