“உங்களிடம் டிராக்டர் இருக்கிறது; என்னிடம் சைக்கிள்கூட இல்லை” - பெண் விவசாயிடம் பிரதமர் நகைச்சுவை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வளர்ந்த இந்தியாவுக்கான சபத யாத்திரையை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். இதன்படி நாடு முழுவதும் எல்இடி திரைகளுடன் கூடிய சிறப்பு வேன்கள் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அரசு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று முன்தினம் உரையாடினார். அப்போதுகாஷ்மீரின் ரங்பூர் கிராம பஞ்சாயத்து தலைவரும் பெண் விவசாயியுமான பல்வீர் கவுருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அப்போது பல்வீர் கவுர் கூறும்போது, “எங்கள் கிராமத்தில் வேளாண் கடன் அட்டை, பண்ணைஇயந்திரங்கள் வங்கி, விவசாயிகள் வருவாய் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பலன்களை முழுமையாகப் பெற்றிருக்கிறோம். வேளாண் கடன் அட்டை திட்டத்தில் நானும் சொந்தமாக டிராக்டர் வாங்கியுள்ளேன். கடைநிலையில் இருந்து பணியாற்றவும் பணி விவரங்களை முழுமையாக நினைவில் வைத்திருப்பதையும் உங்களிடம் (பிரதமரிடம்) இருந்து கற்றுக் கொண்டேன்" என்றார்.

அவருக்கு பிரதமர் மோடி பதிலளித்தபோது, “மத்திய அரசின் திட்டங்களால் உங்கள் கிராமம் பலன் அடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அருகில் உள்ள 10 கிராமங்களில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

பல்வீர் கவுருடன் பேசும்போது பிரதமர் மோடி தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தினார்.

பல்வீர் கவுர் பேசும்போது, அரசு திட்டத்தில் சொந்தமாக டிராக்டர் வாங்கிவிட்டேன் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட பிரதமர் மோடி, “உங்களுக்கு சொந்தமாக டிராக்டர் இருக்கிறது. என்னிடம் சைக்கிள்கூட இல்லை’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE