ஸ்டெர்லைட் வழக்கில் டிச. 6-ல் இறுதி விசாரணை? - ஆலையை திறக்க கோரி டெல்லியில் தூத்துக்குடி மக்கள் போராட்டம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 6-ல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலையை மீண்டும் திறக்கக் கோரி தூத்துக்குடி கிராமவாசிகள் நவம்பர் 28-ல் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கடந்த 2018-ல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து வேதாந்தா குழுமத்தின் அந்த ஆலை மூடப்பட்டது. இதன் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இச்சூழலில், தூத்துக்குடி கிராமவாசிகள் டெல்லிக்கு வந்து ஜந்தர்மந்தரில் கடந்த 28-ம்தேதி போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தில் பெண்கள் மற்றும் வயதானவர்கள் உட்பட சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான பதாகைகளை அவர்கள் தங்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். ‘போராடிய போராட்டம் போதும்! விரைவில் ஸ்டெர்லைட் ஆலைக் கதவுகள் திறக்கட்டும்!’, ‘நாங்கள்இழந்த வாழ்வைத் தேடுகிறோம்! ஜந்தர் மந்தரில் நின்று வேண்டுகிறோம்!’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் பதாகைகளில் இடம் பெற்றிருந்தன. இந்தப் போராட்டத்தின் பின்னணியில் ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமம் இருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் போராட்டக்காரர்கள் கூறும்போது, “ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நம்பி எங்களது வாழ்க்கை இருந்தது. ஆலை மூடப்பட்டதால் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை மீண்டும் திறந்தால் எங்கள் வாழ்க்கைக்கு விடியல் ஏற்படுவதுடன், பொருளாதார ரீதியாகவும் நாங்கள் உயர முடியும். இந்த ஆலையால் நேரடியாகவும், மறைமுகமாகவும் எங்கள் கிராமங்கள் வளமடைந்து வந்தன. இந்த ஆலை தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்” என்று தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் இண்டியா லிமிடெட் எனும் பெயரில் கடந்த 1998-ல்இந்த ஆலை தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது. இதற்கு முன்பாக அந்த ஆலையை தங்கள் பகுதியில் தொடங்க மகாராஷ்டிரா, குஜராத், கோவா ஆகிய மாநிலங்கள் மறுப்பு தெரிவித்தன. சுற்றுச்சூழல் மாசுபடும் என்பது இதற்குகாரணமானது. நாட்டின் மிகப்பெரியஅளவில் இந்த காப்பர் ஆலைஅமைந்த பிறகு தூத்துக்குடியிலும் சுற்றுச்சுழல் மாசுபாடு பிரச்சினை எழுந்தது. இது, பெரும் போராட்டமாக மாறியதை தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 2018, மே 28 முதல் இந்த ஆலை மூடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE