அரசியல் களத்தில் பளிச்சென நினைவுக்கு வருவது எந்த புகைப்படம்? குஜராத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமர் மோடி வெற்றிக்குறியைக் காண்பிப்பது.. காந்தி குல்லாயில் ராகுல் காந்தி காங்கிரஸ் கொடியை பறக்கவிடுவது.. புதிய தலித் தலைவரின் புகைப்படம்.. வெற்றிக்களிப்பில் அமரீந்தர் சிங்.. வாக்குப் பெட்டிகளைச் சாடும் கேஜ்ரிவால்.. நொய்டாவில் மெட்ரோவை துவக்கிவைத்து மூட நம்பிக்கையை உடைத்த பாஜகவின் வளரும் நட்சத்திரம் ஆதித்யநாத்..
இன்னும் இருக்கிறது.. குஜராத் விஜய் ருபானி பதவியேற்பு விழாவில் பாஜக, கூட்டணி முதல்வர்களுடன் பங்கேற்ற நிதிஷ்குமார்...
என்னுடைய தேர்வு இவை எதுவுமே இல்லை. குஜராத் வெற்றிக்குப் பிறகு பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் மோடி வேதனையுடன் பேசும் புகைப்படம்தான் என் தேர்வு. இந்தப் புகைப்படம்தான் இந்த ஆண்டு அரசியலையும் அடுத்தாண்டு தேர்தல் போட்டியையும் தீர்மானிக்கப் போகிறது.
பிரதமர் மோடி எப்போதுமே உணர்ச்சிகளை எளிதில் காட்டிக் கொள்ளாதவர். அப்படிப்பட்டவர் இந்தக் கூட்டத்தில் பேசிய பேச்சு, அவருடைய உள்ளக் குமுறலைக் காட்டுவதாக இருந்தது.
குஜராத் தேர்தல் பிரச்சாரத்துக்கு நடுவில்தான், போராடினால்தான் வெற்றிபெற முடியும் என்பதை அறிந்தார். தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்றாலும் முக்கியமான தொகுதிகளில் ஏற்படும் தோல்வி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும், காங்கிரஸை மீண்டும் பலப்படுத்தியிருக்கும். இதுபோன்ற சூழலில் மோடியின் உணர்ச்சிகரமான பேச்சில், ஒரு வழியாக வெற்றிபெற்று விட்டோம் என்ற நிம்மதி உணர்வையும் அதே நேரம் கோபத்தையும் காண முடிந்தது.
குஜராத்தில் 22 வருட ஆட்சி சலிப்பைத் தந்திருக்கும் என்ற கட்சியின் வாதம் அவரை ஏமாற்ற முடியாது. அவர் பிரதமர் ஆன பிறகு நடக்கும் முதல் குஜராத் தேர்தல் அது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் பல பிரச்சினைகளைச் சந்தித்தது கட்சி. 2 முதல்வர்களைச் சந்தித்தது. மிகப் பெரிய சாதி ரீதியிலான இயக்கங்கள் வலுப்பெற்றதை கட்சியும் ஆட்சியும் தடுக்கத் தவறிவிட்டன.
விவசாயிகளின் கோபம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஆனது. காங்கிரஸ் தலைவர்களே மோடியைப் பார்த்து பிரமித்து நிற்கும் வேளையில், மோடியைப் பிடிக்காத புதிய தலைமுறை தலைவர்கள் பெரிய அளவில் வளர்ந்தனர். தனது பிரதமர் பதவியின் நான்காவது ஆண்டில் குஜராத்தில் மீண்டும் வெற்றிபெறவில்லை என்றாலோ, கட்சி தோற்றுப்போயிருந்தாலோ என்ன ஆயிருக்கும்? இதுதான் மோடியின் கோபத்துக்குக் காரணம்.
பொருளாதார வளர்ச்சியும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. வேலையில்லாத இளைஞர்களும் விவசாயிகளைப் போலவே கோபத்தில் இருந்தார்கள். தேக்கநிலையில் இருந்த பொருளாதாரத்தை சரிசெய்ய உடனடி நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலைமை.
2018-ல் இந்த பிரச்சினைகள் குறித்து மோடி தீவிரமாகக் கவனிப்பார். அதுதான் அவரது அரசியல் பாதையைத் தீர்மானிக்கும்.
குஜராத்தை விடவும் 3 மடங்கு பெரியது உ.பி.. இருந்தாலும் குஜராத் தேர்தல்தான் எதிர்கால அரசியல் சூழலைத் தீர்மானிக்கும்.
சில விஷயங்களை 2019 எம்.பி. தேர்தலிலும் அடுத்து தேர்தல் வரக் காத்திருக்கும் 10 மாநிலங்களிலும் செயல்படுத்துவார். இந்துக்கள் பிளவுபடாமல் மொத்தமாக வாக்களித்தால் பாஜக வெற்றிபெறும். ஜிக்னேஷ், அல்பேஷ், ஹர்திக் ஆகியோருடன் இணைந்த காங்கிரஸ், ஏறக்குறைய வெற்றியைப் பெற்றுள்ளது. இது மீண்டும் நடப்பதை மோடியும் அமித்ஷாவும் விரும்ப மாட்டார்கள். எனவே இந்துத்வா கோஷம் ஓங்கி ஒலிக்கும்.
இதன் முதல் நகர்வுதான் முத்தலாக் தடை மசோதா. கோயில் கோயிலாகப் போய், ராகுல் இதற்கு பதில் சொல்வார். கர்நாடகத்தில் திப்பு விவகாரம் இருக்கிறது. ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்திலும் இதேபோல் புதிதாக விவகாரங்கள் கிளப்பப்படும்.
ஊழலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் அடுத்த தேர்தலில் கொஞ்சம்தான் உதவும். எனவே, இனி வருமான வரி சோதனைகள் அதிகரிக்கும். பெரிய தொழிலதிபர்கள் சிக்குவார்கள். . 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது, ஊழலுக்கு எதிரானவர் மோடி என்ற நற்பெயரில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆதர்ஷ் வழக்காலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நெருக்கடியான நேரத்தில் ஆளும் அரசு சரியில்லை என்றாலும்கூட, மக்கள் ஆட்சியாளர்கள் பக்கம் தான் இருந்திருக்கிறார்கள் என்பதைவரலாறு கூறுகிறது. உதாரணம் கார்கில் போர், மும்பை தாக்குதலை அடுத்து வாஜ்பாய் அரசும் மன்மோகன் அரசும் பெற்ற வெற்றிகள். எனவே, டிவி சேனல்களின் ஆதரவோடு, பாகிஸ்தானுடனான பிரச்சினை பெரிதாக்கப்படும் என எதிர்பார்க்கலாம்..
அரசியலில் பாஜக கையில் எடுக்கப்போகும் மூன்று விஷயங்கள் மதம், தேசப்பற்று, ஊழல். மீதியிருக்கும் பதவிக்காலத்தை முடிவு செய்யப்போகும் மோடியின் முகம் சொல்லும் விஷயம் இதுதான் என்பதே நமது கணிப்பு.
தமிழில்: எஸ்.ரவீந்திரன்
சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,
முதன்மை ஆசிரியர்
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago