ராஜஸ்தானில் 1993 முதல் காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆட்சிக்கு வரும் போக்கு மாறுமா?

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 1993 முதல் நிலவும் நடைமுறையில் மாற்றம் வருமா என ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது. ஏனெனில், இம்மாநிலத்தில் காங்கிரஸ் ஒருமுறை, பாஜக மறுமுறை என மாறி, மாறி ஆட்சிக்கு வருகின்றன.

ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள், டிசம்பர் 3-ல் வெளியாக உள்ளன. இந்த முறை தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை நம்பி உள்ளார்.பாஜகவோ தமது பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய ஆட்சியை நம்பி உள்ளது. வழக்கமாக ஒரு சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநிலத்தின் ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையிலான தேர்தலாக இந்த தேர்தல் இல்லை. மாறாக, மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான போட்டியாகவே ராஜஸ்தான் தேர்தல் இருந்தது. கடந்த 1993 தேர்தல் முதல் ராஜஸ்தானில் ஒரு நடைமுறை இருந்து வருகிறது.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், ஒருமுறை காங்கிரஸும், மறுமுறை பாஜகவும் என மாறி, மாறி ஆட்சி அமைக்கின்றன. இதன்படி, நடந்து முடிந்துள்ள தேர்தலில் பாஜகவின் ஆட்சி அமைய வேண்டும். இது, பாஜக தலைமை முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவை முன்னிறுத்தியிருந்தால் உறுதியாகக் கூறி இருக்க முடியும் என ஒரு கருத்தும் உள்ளது. உட்கட்சிப் பூசலின் காரணமாக, பாஜகவில் முதல்வர் வேட்பாளராக யாரும் முன்னிறுத்தப்படவில்லை.

ராஜஸ்தானில் விளிம்புநிலை மெஜாரிட்டியில் அமைந்த ஆட்சியிலும் இதுவரை எந்த அரசும் கவிழ்க்கப்பட்டதில்லை. அதேசமயம், காங்கிரஸ், பாஜகவை தவிர வேறு எந்த கட்சிகளும் இம்மாநிலத்தின் ஆட்சியை தனித்து அமைத்ததும் இல்லை. ஒருமுறை 1990-ல் வி.பி.சிங்கின் ஜனதா கட்சி ஆட்சியிலிருந்தபோது அதன் முக்கிய கூட்டணியாக பாஜக இருந்தது. அப்போது, ஜனதா கட்சிக்கு 55 மற்றும் பாஜகவுக்கு 85 எம்எல்ஏக்கள் இருந்தனர்.

பாஜகவுக்குப் பின், இதர சில கட்சிகளும் ஆளுங் கட்சிக்கு ஆதரவளித்து ஆட்சியில் பங்கெடுக்க முயன்று முடியாமல் போனது. 1993-ல் வந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் வென்று பைராம்சிங் ஷெகாவாத் முதல்வரானார். இதன் பிறகு காங்கிரஸில் அசோக் கெலாட்டும், பாஜகவில் வசுந்தரா ராஜேவும் மாறி, மாறி முதல்வராகினர். இந்த நடைமுறையை தாம் மாற்றிக் காட்டுவோம் என முதல்வர் அசோக் கெலாட் நம்புகிறார்.

எனினும், துவக்கம் முதல் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டுக்கு இடையே இருந்த போட்டி மேலும் வலுத்து காங்கிரஸுக்கு பின்னடைவாகிவிட்டது. ஒருவேளை காங்கிரஸ் தோல்வி அடைந்தால், இந்த இரு தலைவர்களுக்கு இடையிலான போட்டியே அதன் காரணமாக இருக்கும் என்ற கருத்தும் உள்ளது. இந்த தேர்தலில் கட்சி தலைமை தன்னை முன்னிறுத்தவில்லை என்றாலும், மகாராணியான வசுந்தராவின் 65 ஆதரவாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதன் பின்னணியில் பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த எண்ணிக்கையிலான எம்எல்ஏக்களை புறக்கணிப்பது சாத்தியமல்ல. இதனால், பாஜக வென்றால் வசுந்தராவே முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ராஜஸ்தானில் வெற்றி பெறும் கட்சிக்கு முதல்வர் தேர்வு பெரும் சவாலாகி விடும். அதன் தலைவர்களில் முதல்வராவது யார் என்ற மோதல் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE