“இந்தியாவை நம்பர் 1 ஆக்குவதே முதன்மை நோக்கம்” - சந்திரபாபு நாயுடு உருக்கம்

By செய்திப்பிரிவு

திருப்பதி: “இந்தியாவை உலகில் நம்பர் ஒன் ஆக்குவதும், தெலுங்கு மக்களை முதன்மையான இடம்பிடிக்க வைப்பதுமே எனது பிரதான நோக்கம்” என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உருக்கமாக தெரிவித்துள்ளார்.

திருப்பதி மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை சந்திரபாபு நாயுடு தனது மனைவி புவனேஸ்வரியுடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது அவர் கூறியது: “இந்தியாவை உலகின் நம்பர் ஒன் ஆக்குவதும், தெலுங்கு மக்களை முதலிடம் பிடிக்க வைப்பதுமே எனது முதன்மையான நோக்கம். எப்போதுமே அதுதான் என் கனவாக இருந்து வருகிறது. எனது 45 வருட அரசியல் வாழ்க்கையில் அதற்காகத்தான் வேலை செய்திருக்கிறேன். மற்ற நாடுகளின் முன்னேற்றங்களைப் பார்த்து அவதானிப்பதும், அவர்களின் தொழில்நுட்பங்களை மாநில மக்களின் நன்மைக்காகவும் முன்னேற்றத்துக்காவும் பயன்படுத்துவதே எனது ஆர்வமாக இருந்து வந்திருக்கிறது" என்றார்.

மீண்டும் எப்போது அவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவார், பொது வெளிகளில் வருவார் என்று கேட்டதற்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு, "கண்டிப்பாக எனது எதிர்கால திட்டத்தைப் பற்றி உங்களுக்கு சொல்வேன். ஆனால், இப்போது இன்னும் சில கோயில்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன். பகவான் வெங்கடேஷ்வரர் எங்களின் குலதெய்வம். அதனால்தான் நான் இந்த மலைக்கோயிலுக்கு செல்வதற்கு முன்னுரிமை அளித்தேன். என் வாழ்க்கையில் எந்த ஒரு முக்கியமான விஷயங்கள் நடந்தாலும் வெங்கடேஷ்வரனின் ஆசிர்வாதத்தை பெறுவது எனது வழக்கம்.

நான் இந்த மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் அலிபிரி குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்ததே இந்த வெங்கடேஷ்வரனின் ஆசிர்வாதம் தான். தற்போது என் வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்களையும், கஷ்டங்களையும் இவரின் ஆசிர்வாதத்தால் நான் கடந்து வந்தேன். இந்த இக்கட்டான நேரத்தில் என்மீது நம்பிக்கை வைத்த மாநில மக்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் ரூ.371 கோடி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் சந்திரபாபுவை ஆந்திர சிஐடி போலீஸார் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கைது செய்தனர். பின்னர் மருத்துவ காரணங்களுக்காக சந்திரபாபுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 31–ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 53நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து சந்திரபாபு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE