ஹைதராபாத்: தெலங்கானா மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று (நவ.30) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், "மக்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களின் வாக்களிக்கும் கடமையினை ஆற்ற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
ஐந்து மாநில தேர்தல்களில் கடைசி மாநிலமான தெலங்கானாவில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இதனை ஒட்டி இன்று காலை முதலே பிரமுகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
இவ்வாறு முதல் ஆளாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த பிரபலங்களில் ’புஷ்பா’ பட நடிகர் அல்லு அர்ஜுனும் ஒருவர். தனது வாக்கினை செலுத்தி விட்டு மை பொட்டிட்ட ஆட்காட்டி விரலினை காட்டியபடி பத்திரிகையாளர்களைச் சந்தித்த அல்லு அர்ஜுன், "மக்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களின் வாக்களிக்கும் கடமையினை செய்யவேண்டும்" என்று வலியுறுத்தினார். அப்போது அவரிடம் தெலங்கானா மக்கள் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல், மவுனமாக புன்னகைத்துவிட்டு நகர்ந்தார் அல்லு அர்ஜுன்.
அதேபோல், ஜூப்ளி ஹில்ஸ் காங்கிரஸ் வேட்பாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான அசாருதீன், ”மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால் உங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இருக்காது" என்று தெரிவித்துள்ளார்.
» தெலங்கானா தேர்தல் | காலை 10 மணி நிலவரப்படி 22% வாக்குகள் பதிவு
» தெலங்கானா | தேர்தல் நாளில் வாக்கு சேகரித்ததாக பிஆர்எஸ் கவிதா மீது காங்கிரஸ் புகார்
தெலங்கானா தேர்தலின் இன்றைய காலை வாக்குப்பதிவு ஹைதராபாத்துக்கு மட்டும் நட்சத்திர அணிவகுப்பாக இருந்ததது என்றால் அது மிகையில்லை. தெலுங்குதேச பிரபலங்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
சபரிமலைக்கு மாலை அணிந்துள்ள நிலையில், நடிகர் சிரஞ்சீவி ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தனது குடும்பத்தாருடன் வரிசையில் நின்று வாக்களித்தார். இதேபோன்று இங்கு ஜூனியர் என்.டி.ஆர் தனது குடும்பத்தினருடன் ஹைதராபாத்தில் உள்ள பி ஓபுல் ரெட்டி பப்ளிக் பள்ளியில் வாக்குச்செலுத்தினார். நடிகர் வெங்கடேஷ் டக்குபதி மணிகொண்டாவில் உள்ள ஹைதராபாத் பிரசிடெண்சி டிகிரி மற்றும் பிஜி காலேஜ் வாக்குச்சாவடியிலும், நடிகர் ஸ்ரீகாந்த் ஜூப்ளி ஹில்லில் தங்களின் வாக்குகளைச் செலுத்தினர்.
அதேபோல், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, தெலங்கானாவில் கங்கா - ஜமுனி கலாச்சாரத்தை பராமரிக்க மக்கள் அதிக அளவில் வந்து வாக்களிக்க வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில், "இன்றைய நாளை விடுமுறை நாளாக கருத வேண்டாம். குறிப்பாக நகர்புற வாக்காளர்கள் இந்த நாளை விடுமுறை நாளாக கருதுகின்றனர். நீங்கள் வாக்களிக்கும் போது அரசியல்வாதிகளின் பொறுப்புகள் அதிகரிக்கின்றது" என்றார்.
தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தேர்தல் தொடங்கியது. 106 தொகுதிகளுக்கு மாலை 5 மணி வரையும், இடதுசாரி தீவிரவாதம் அதிகமுள்ள 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பணியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். மதியம் 1 மணி நிலவரப்படி 36.68% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிஆர்எஸின் கோட்டையான தெலங்கானாவில் அதன் பலத்தை தகர்க்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. இதனால் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானாவில் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையில் மும்முனை போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
19 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago