தெலங்கானாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல்: 119 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடக்கிறது

By என்.மகேஷ்குமார்


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் உள்ள119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில்,தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர், மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் டிச.3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இன்று நடைபெற உள்ள தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்காக மொத்தம் 35,655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 5மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது.

பதற்றமானதாக கண்டறியப்பட்ட 4 ஆயிரம் வாக்குசாவடிகளில், கூடுதல் ராணுவம், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

3.26 கோடி வாக்காளர்கள்: இத்தேர்தலில் மொத்தம் 3.26 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். 3-வது பாலின வாக்காளர்கள் 2,676 பேர் உள்ளனர்.

18 முதல் 19 வயது வரை உள்ளபுதிய வாக்காளர்கள் 9.99 லட்சம்பேர் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனர்.

தேர்தல் பணியில் மொத்தம் 3.75 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேற்று அந்தந்த மாவட்டஆட்சியர் அலுவலகங்களில் இருந்து வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 80 வயதுநிரம்பிய மூத்த வாக்காளர்களின் வீடுகளுக்கே தேர்தல் அதிகாரிகள் சென்று வாக்குகளை சேகரிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

பாதுகாப்பு பணிகளில் மொத்தம் 50 ஆயிரம் போலீஸார், 375கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE