“உங்கள் துணிச்சல் பாராட்டுக்குரியது” - மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கு தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உங்கள் துணிச்சல் பாராட்டுக்குரியது என மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களிடமும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் பேசியதாவது: நான் எனது தொலைபேசி ஸ்பீக்கரை ஆன் செய்துள்ளேன். நீங்கள் பேசுவதை என்னுடன் இருப்பவர்கள் அனைவரும் கேட்பதற்காக அவ்வாறு செய்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் மகிழ்ச்சியுடன் வெளி வந்துள்ளீர்கள். அதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கேதார்நாத் பாபா, பத்ரிநாத் ஜியின் கருணையால் நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் தைரியமாக இருந்து, மற்றவர்களையும் தைரியப்படுத்தியுள்ளீர்கள். இது மிகப்பெரிய விசயம். ஏனென்றால் நாம் ஒரு ரயிலில் பயணம் செய்யும்போது சில சமயம் உடன் பயணிப்பவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிடும். இக்கட்டான சூழ்நிலையிலும் நீங்கள் மிகவும் பொறுமை காத்துள்ளீர்கள்.

நான் தொடர்ந்து மீட்புப் பணிகள் குறித்த தகவல்களைக் கேட்டும், மாநில முதல்வரிடம் தொடர்பிலும் இருந்தேன். பிரதமர் அலுவலக அதிகாரிகள் மீட்புப்பணிகள் குறித்த தகவல்களை எனக்கு தொடர்ந்து தெரிவித்தனர். மீட்பு நடவடிக்கைகள் காலதாமதமானபோது நான் மிகவும் கவலை அடைந்தேன். உங்களுடைய குடும்பத்தினர், நண்பர்களின் பிரார்த்தனைகளால் நீங்கள் இந்த சிக்கலை வென்றுள்ளீர்கள்" இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களில் ஒருவர் பிரதமரிடம் கூறுகையில், "நாங்கள் ஒரு போதும் பயப்படவோ, நம்பிக்கை இழக்கவோ இல்லை. 41 பேரும் ஒன்றாகவே இருந்தோம். எங்களுடைய இரவுச்சாப்பாட்டை ஒன்றாகவே சாப்பிட்டோம். பின்னர் என்னுடன் இருந்தவர்களிடம் நாம் ஒன்றாக நடக்கலாம் என்று கூறினேன். 2.5 கி.மீ., தூரத்துக்குள் நாங்கள் சிக்கியிருந்தோம். அதனால் எங்களால் அதில் நடக்க முடிந்தது. உள்ளே நாங்கள் யோகாவும் செய்தோம். எங்களுக்கு அங்கே செய்வதற்கு எந்த வேலையும் இல்லை என்பது முக்கியமானது. இந்த 17 நாட்களும் எங்களுக்கு ஆதரவளித்த உத்தராகண்ட் அரசுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். முதல்வர் எங்களுடன் தொடர்பு கொண்டார் அவருக்கும் இந்த நேரத்தில் நான் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் ஜெனரல் வி.கே.சிங் குகையின் வெளியிலேயே இருந்து எங்களுக்கு ஆதரவாக இருந்தார்.

சில்க்யாரா சுரங்கத்துக்குள் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை சினியாலிசவுர் சமுதாய சுகாதார நிலையத்தில் வைத்து நடக்கிறது. அனைத்து தொழிலாளர்களும் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் ஆலோசனைகளின் பெயரில் அவர்களுக்கு உணவுகள் வழங்கப்படுகின்றன என்று அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் செவ்வாய்கிழமை மாலையில் பத்திரமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளே சிக்கியிருந்தவர்களுடன் நாம் தொடர்ந்து அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தது அவர்களின் மனநிலை உறுதியாக இருந்ததற்கு காரணமாக அமைந்தது என்று கர்வார் மண்டலத்தின் சுகாதார இயக்குனரும், மீட்பு நடவடிக்கையின் பொறுப்பாளருமான டாக்டர் பிரவின் குமார் தெரிவித்தார்.

சிக்கியிருந்த தொழிலாளர்கள் சந்தித்த உடல் சார்ந்த பிரச்சினைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரவின் குமார், "நல்வாய்ப்பாக தொழிலாளர்களுக்கு எந்தவிதமான பெரிய பாதிப்புகளும் ஏற்படவில்லை. சிலர் சிறுநீர் கழிக்கும் போது சிரமத்தைச் சந்தித்துள்ளனர். சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது. அவைகளுக்கு ஏற்ப பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக தண்ணீர், ஜூஸ், உணவுகள் வழங்கப்பட்டு வந்தன" என்றார்.

இந்நிலையில், 17 நாட்களுக்குப் பின், சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஒருவர் பின் ஒருவராக சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். முதலாவது நபர் வெளியே வந்தபோது, சுரங்கத்தின் வெளியே காத்திருந்த மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள், உறவினர்கள், பொதுமக்கள், ஓட்டுநர்கள் என அனைவரும் கைகளைத் தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE