அந்த 17 நாட்கள் | சுரங்கத்தில் இருந்து மீண்டு சுதந்திரமாய் ஒரு பெருமூச்சு!

By செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கடந்த 17 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்பு குழுவினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

உத்தராகண்டின் உத்தரகாசியில் இருந்து யமுனோத்ரி செல்ல106 கி.மீ. சுற்றி செல்ல வேண்டிஉள்ளது. இதை 26 கி.மீ. ஆக குறைக்கும் விதமாக, சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ.தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் 2 கி.மீ. வரை சுரங்கம் தோண்டப்பட்ட நிலையில், கடந்த 12-ம் தேதி தீபாவளியன்று அதிகாலை சுரங்கப் பாதையின் நுழைவுவாயிலில் இருந்து 200 மீட்டர்தொலைவில் திடீரென மண்சரிவுஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக்கொண்டனர். சுமார் 60 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதையை மண் மூடியது. உள்பகுதியில் சுமார்ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு மண் சரிவு ஏற்படாததால், அப்பகுதியில் தொழிலாளர்கள் பத்திரமாக இருந்தனர்.

உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்க முதலில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் சரிவை அகற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மேல் பகுதியில் இருந்து தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. பின்னர், டெல்லி, குஜராத், ஒடிசா, உத்தர பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ராட்சத துளையிடும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, மண் குவியலின் பக்கவாட்டில் துளையிடப்பட்டது. கடினமான பாறைகளை துளையிட முடியாமல் பலவேறு இயந்திரங்கள் பழுதாகின.

அமெரிக்க தயாரிப்பான ஆகர்இயந்திரம் மட்டும் மண் குவியலின் பக்கவாட்டில் 47 மீட்டர் தூரத்துக்கு துளையிட்டு இரும்பு குழாய்களை பொருத்தியது. ஆனால், அதிவேகமாக இயக்கியதால் அமெரிக்க இயந்திரம் கடந்த 25-ம் தேதி உடைந்தது. அதை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில், சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த அந்த இயந்திரத்தின் 14 அடி நீள பிளேடு அறுக்கப்பட்டு முழுமையாக அகற்றப்பட்டது.

‘எலி வளை’ ஆபரேஷன்: இதற்கிடையே, மாற்று திட்டங்களும் பரிசீலிக்கப்பட்டன. சமதளம், மலைப் பகுதியில் எலிவளைபோல குடைந்து சிறிய சுரங்கம் தோண்டுவதில் வல்லவர்களான ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளர்கள் 24 பேர் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டனர். அமெரிக்க ஆகர் இயந்திரம் மூலம் ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்த 47 மீட்டர் இரும்பு குழாய் பாதையில் ‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்கள் 3 பேர் நேற்று முன்தினம் (நவ.27) இரவு நுழைந்தனர். ஒருவர் சிறியரக இயந்திரத்தால் சுரங்கத்தை தோண்ட, மற்றொருவர் மண் குவியலை அப்புறப்படுத்தினார். 3-வது நபர் மண் குவியலை அள்ளி டிராலியில் நிரப்பினார். அந்த டிராலி நிரம்பியதும் வெளியே காத்திருந்த தொழிலாளர்கள், கயிறு மூலம் டிராலியை வெளியே இழுத்து மண்ணை அப்புறப்படுத்தினர். முதலில் அனுப்பப்பட்ட 3 ‘எலி வளை’ தொழிலாளர்கள் சோர்வடைந்ததும் அடுத்த மூவர் குழு சுரங்கப் பாதைக்குள் நுழைந்து பணியை தொடர்ந்தனர். இவ்வாறு 21 மணி நேரத்தில் 13 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் தோண்டப்பட்டு வெற்றிகரமாக இரும்பு குழாய்கள் பொருத்தப்பட்டன. குழாயில்இருந்து தொழிலாளர்கள் சிக்கியிருந்த சுரங்கப் பாதை பகுதியில் ஏறி, இறங்குவதற்காக படிக்கட்டு அமைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 41 தொழிலாளர்கள் சிக்கியிருந்த பகுதிக்கு அந்த குழாய் வழியாக தேசிய பேரிடர் மீட்பு படையின் 15 வீரர்கள் நேற்று இரவு ஊர்ந்து சென்றனர். மீட்பு படையை சேர்ந்த மருத்துவர் ஒருவரும் உள்ளே சென்றார். சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் சிக்கியிருந்த இடத்தை அவர்கள் சென்றடைந்தனர். பின்னர், அவர்களுக்கு உடல்நல பரிசோதனைகளை மருத்துவர் செய்தார்.

முழு ஆரோக்கியத்துடன் இருந்த தொழிலாளர்கள் குழாய் வழியாக ஊர்ந்து வெளியேறினர். இவ்வாறு, முதல் தொழிலாளி நேற்று இரவு 8 மணி அளவில் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து, ஒவ்வொரு தொழிலாளராக இரும்பு குழாய் வழியாக வெளியே வந்தனர். சோர்வாக இருந்த தொழிலாளர்கள் பிரத்யேக டிராலியில் படுக்க வைக்கப்பட்டு கயிறு மூலம் வெளியே இழுத்து மீட்கப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு,அனைவரும் உடனடியாக தனித்தனி ஆம்புலன்ஸில் சைனாலிசார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டனர்.

நலம் விசாரித்தார் முதல்வர்: மத்திய அமைச்சர் வி.கே.சிங் கடந்த சில நாட்களாக சம்பவ இடத்திலேயே முகாமிட்டு மீட்பு பணிகளை கவனித்து வந்தார். உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி நேற்று சுரங்கப் பாதைக்குள் சென்று, மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் நலம் விசாரித்தார். ‘சில்க்யாரா சுரங்கப் பாதைமீட்பு பணியில் வெற்றி அடைந்துள்ளோம். தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்’ என்றுஎக்ஸ் வலைதள பதிவில் அவர்தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் உறவினர்களும் சுரங்கப் பாதைக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். தொழிலாளர்களை பார்த்ததும் அவர்கள் கண்ணீர் விட்டு கலங்கினர்.

தலைவர்கள் பாராட்டு: தொழிலாளர்களை பத்திரமாக மீட்ட மீட்பு குழுவினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி, எக்ஸ் சமூகவலைதள பதிவில், ‘தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது நெகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களது துணிச்சல், பொறுமை அனைவருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது. சுரங்க மீட்பு பணியில் மனிதாபிமான முயற்சிகள், குழு முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழக நிபுணர்களால் திருப்புமுனை: சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தரணி ஜியோ டெக் நிறுவனம் ஈடுபட்டது. கடந்த 21-ம் தேதி இந்த நிறுவனத்தின் நிபுணர்கள், பிஆர்டி-ஜிடி5 என்ற இயந்திரம் மூலம் மண் குவியலில் துளையிட்டு, 6 அங்குலம் விட்டம் கொண்ட குழாயை தொழிலாளர்கள் இருக்கும் இடம் வரை செலுத்தினர். மீட்பு பணியில் இது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுவரை மிகச் சிறிய குழாய் வழியாக உலர் பழங்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தமிழக நிபுணர்கள் பொருத்திய குழாய் வழியாக, சமைத்த உணவுகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. அத்துடன், ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) நவீனகேமராவும் குழாய் மூலம் செலுத்தப்பட்டு, தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பது கண்காணிக்கப்பட்டது. மீட்பு பணியில் தாமதம் இருந்துவந்த நிலையில், தமிழக நிபுணர்கள் அமைத்த குழாய் மூலமாகவே தொழிலாளர்களின் உடல்நலம், மனநலம் பாதுகாக்கப்பட்டதாக மீட்பு பணி அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

சுரங்கப் பாதை அருகே தங்கிய முதல்வர் தாமி: சில்க்யாரா சுரங்கப் பாதை மீட்புப் பணிகளை உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரடியாக ஆய்வு செய்தார். தலைநகர் டேராடூன், சில்க்யாரா இடையிலான தொலைவு 140 கி.மீ. ஆகும். தலைநகரில் இருந்து மீட்புப் பணி நடைபெறும் இடத்துக்கு வந்து செல்ல காலதாமதம் ஆகும் என்பதால் சுரங்கப் பாதை அருகே உள்ள இந்திய - திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வளாகத்தில் முதல்வரின் கேம்ப் அலுவலகம் அமைக்கப்பட்டது.

கடந்த இரு வாரங்களாக சில்க்யாரா அருகேயுள்ள கேம்ப் அலுவலகத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தங்கியிருந்து அடிக்கடி சுரங்கப் பாதைக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அவர் நேற்று பல மணி நேரம் சுரங்கப் பாதையில் முகாமிட்டிருந்தார். மீட்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் ஆரத் தழுவி நலம் விசாரித்தார். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் தாமி அறிவித்தார். உத்தராகண்ட் மட்டுமன்றி நாடு முழுவதும் இருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பட்டாசு வெடித்து கொண்டாடிய உறவினர்கள்: சுரங்கத்திலிருந்து மீட்கபட்ட தொழிலாளர்களின் உறவினர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யா நாயக்கின் சகோதரர்கள் குணோதர் நாயக், ரவிந்திர நாயக் சுரங்கத்தினுள் சிக்கி இருந்தனர். இதனால், நேற்று மீட்பு இடத்துக்கு வந்திருந்த அவர், கூறுகையில், “என்னுடைய பெற்றோர்கள் மணிக்கு ஒருமுறை எனக்கு போன் செய்துகொண்டிருந்தார்கள். சகோதரர்கள் மீட்கப்பட்டுவிட்டார்களா என்று அவர்கள் அழுதபடி கேட்கிறார்கள். இந்த முறை நாங்கள் தீபாவளி கொண்டாடாமல் இருந்தோம். இப்போது அவர்கள் பத்திரமாக வெளியே வந்து விட்டதால், பட்டாசு வெடித்து எங்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறோம்” என்றார். ஆதித்யாவும் இந்த சுரங்கத்தில் வேலை செய்துவந்தார். சுரங்கம் சரிவதற்கு முன்பாக அவர் வெளியே வந்துவிட்டார். சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர் மன்ஜித்தின் தந்தை சவுத்ரி, சம்பவ இடத்துக்கு அருகிலேயே கூடாரம் அமைத்து 12 நாட்களாக தங்கிவந்தார். “என்னுடைய ஒரே மகன் அவன். என்னிடம் போன் இல்லை. இதனால், என் மனைவியிடம் இங்குள்ள விஷயங்களை பகிர முடியாது. பக்கத்து வீட்டில் டிவியைப் பார்த்து அவர் தெரிந்துகொள்வார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்