உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் மனநலன் இனி..? - மருத்துவர் விளக்கம்

By செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களைக் காப்பாற்றும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், தொழிலாளர்கள் மீட்கப்பட்ட பிறகு, பல்வேறு மனநலம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களைக் காப்பாற்றும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பைப்லைன் செலுத்தும் பணி நிறைவுற்றதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், குழாய் வழியாக தொழிலாளர்களை மீட்கும் பணியில் என்டிஆர்எஃப் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சில தொழிலாளர்கள் வயர்லெஸ் சாதனங்கள் மூலம் மீட்பு பணியாளர்களுடன் தொடர்பில் உள்ளனர் என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், சுரங்கப்பாதையில் நடக்கவும், ஓய்வெடுக்கவும் இரண்டு கிலோமீட்டர் அளவில் இடைவெளி இருக்கிறது. அவர்களுக்குச் சிறிய குழாய் மூலம் மன அழுத்த எதிர்ப்புக்கான சில மருந்துகளும் அனுப்பப்பட்டன. ஒருவருக்கொருவர் பேசி கொள்ளவும், யோகா செய்யவும், உடற்பயிற்சி செய்யவும் மீட்புப்படையினரால் ஊக்குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மாநில அரசால் நிர்வகிக்கப்படும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் தினகரன் இது குறித்து கூறும்போது, “சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களுக்கு அதிர்ச்சிக்கு பிறகான மன அழுத்த பிரச்னைகள் (பிடிஎஸ்டி- PTSD-Post-traumatic stress disorder) ஏற்படும் அபாயம் உள்ளது. அதாவது தூக்கமின்மை, அடிக்கடி கெட்ட கனவு வருவது மற்றும் பதற்றமடைதல் போன்ற மனநலம் சார்ந்த பிரச்சனைகளால் இந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படலாம். அனைவருக்கும் இந்த கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், பெரும்பாலானவர்கள் இந்த அறிகுறிகளால் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது.

குறைந்தது ஒரு வருடமாவது அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மேலும் ஒருவருடைய தனித்தன்மையில் (personality) சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE