அன்று தடை செய்யப்பட்ட சுரங்க நடைமுறை... இன்று உயிர் காக்க உறுதுணை... - யார் இந்த ‘எலி வளை’ தொழிலாளர்கள்?

By செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களைக் காப்பாற்றும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பைப்லைன் செலுத்தும் பணி நிறைவுற்றதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், குழாய் வழியாக தொழிலாளர்களை மீட்கும் பணியில் எண்டிஆர்எஃப் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 17 நாட்கள் போராட்டத்துக்குப் பின்னர் 41 பேரை உயிருடன் மீட்க வழிவகுத்து, ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர் ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளர்கள். அமெரிக்காவின் 25 டன் ஆகர் இயந்திரம் செய்ய முடியாத சவால் நிறைந்த பணியை இந்த ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளர்கள் செய்தது எப்படி எனப் பார்ப்போம்.

‘எலி வளை’ சுரங்கப் பணி என்றால் என்ன? ‘எலி வளை’ சுரங்கப் பணி என்பது சிறிய குழிகளைத் தோண்டி, அதன்மூலம் நிலக்கரியை எடுக்க பயன்படுத்தப்பட்ட நடைமுறையாகும். இந்தக் குழிகள் 4 அடி அகலம்தான் இருக்கும். சுரங்கப் பணியாளர்கள் நிலக்கரி படிமங்களை அடைந்தவுடன், பக்கவாட்டில் சுரங்கம் ஏற்படுத்தப்படும். அதன் வழியாக நிலக்கரி கொண்டுவரப்பட்டு வெளியே குவித்து வைக்கப்படும். ‘எலி வளை’ சுரங்கத்தின் வழியாக செல்லும் தொழிலாளர்கள் கைகளால் சிறிய உபகரணங்களைப் பயன்படுத்தியே நிலக்கரியை வெட்டி எடுப்பார்கள்.

மெலிந்த தேகம், உயரம் குறைவான எலி-வளை சுரங்கத் தொழிலாளர்கள் சமதளம், மலைப்பகுதியில் எலி-வளை போல குடைந்து சிறிய அளவிலான சுரங்கம் தோண்டுவதில் கைதேர்ந்தவர்கள். இதன் காரணமாக ‘எலி-வளை' தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மணிப்பூர், மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் தான் இது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட சுரங்க முறையாக இருந்தது. இந்த எலி-வளை சுரங்கங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவது அதிகரித்தது. மேகாலயாவில் நிறைய குழந்தைகள் ஆபத்து என்று தெரிந்தும் இப்பணியில் ஈடுபட்டனர். சிலர் தங்கள் வயதை மறைத்து 18 வயதுக்கு மேற்பட்டவர் எனக் கூறி சுரங்கப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த முறை சுரங்கப் பணி மிகவும் அதிகமான உடல் உழைப்பு தேவைப்படக் கூடியது. ஒருவர் ட்ரில் செய்ய, இன்னொருவர் கழிவை அகற்ற, மூன்றாவது நபர் அதை ட்ராலியில் வைத்து வெளியேற்றுவார். இதே முறையைப் பின்பற்றிதான் உத்தராகண்ட் சுரங்கத்தில் நிபுணர்கள் துளையிட்டு தொழிலாளர்களை மீட்க வழிவகை செய்துள்ளனர்.

எலி-வளை சுரங்கம் தடை செய்யப்பட்டது ஏன்? - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த முறை சுரங்கப் பணியை தடை செய்தது. இது அறிவியல் பூர்வமானது அல்ல எனக் கூறி தடை செய்தது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் கடந்த 2018-ல் சட்டவிரோதமாக எலி-வளை அமைத்து சுரங்கப் பணியில் ஈடுபட்ட 15 பேர் உள்ளே ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். பல மாதங்களாக மீட்புப் பணி நடந்தது. இரண்டு சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டன. மேலும், இந்த முறையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தச் சூழலில் மேகாலயாவில் எலி-வளை சுரங்கப் பணிகள் தடை செய்யப்பட்டன. மணிப்பூரிலும் இதற்குத் தடை உள்ளது. ஆனால் இந்தத் தடையை நீக்கக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மணிப்பூர் அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

12 நிபுணர்கள்: இந்நிலையில் அமெரிக்காவின் ஆகர் இயந்திரம் செய்ய முடியாத பணியை செய்ய டெல்லியில் இருந்து 12 நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த 12 பேரும் எலி-வளை சுரங்கத் தொழில்நுட்ப நிபுணர்கள். ஆனால், இவர்கள் அந்தத் தொழிலை செய்தவர்கள் அல்ல என உத்தராகண்ட் அரசின் முதன்மை அலுவலர் நீரஜ் காரிவால் தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

12 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்