ஹைதராபாத்: நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. வாக்குப்பதிவு வியாழக்கிழமையும், வாக்கு எண்ணிக்கை டிச.3 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த ஆண்டுடன் ஆட்சிகாலம் நிறைவடையும் 5 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் அக்.9-ம் தேதி அறிவித்தார். அதன்படி, மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் தேர்தல் முடிந்து விட்டது. அடுத்து எஞ்சியிருக்கும் தெலங்கானா மாநிலத்துக்கு வியாழக்கிழமை (நவ.30) தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் டிச.3 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தெலங்கானாவில் கடந்த 2014ம் ஆண்டு முதல் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. பிராந்திய அளவில் பலம் பொருந்திய பிஆர்எஸ் கட்சி 3-வது முறையாக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. கர்நாடகா தேர்தல் தந்த வெற்றி களிப்புடன் பிஆர்எஸ் கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டிவருகின்றது. இதனிடையே கர்நாடகாவில் விட்டதை தெலங்கானாவில் பிடித்து தென்மாநிலங்களில் மீண்டும் கால் பதிக்க பாஜக முனைப்பு காட்டிவருகிறது.
மாநிலத்தில் மொத்தமுள்ள 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாநில முதல்வரும் பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகரராவ், அவரது மகனும் மாநில அமைச்சருமான கே.டி.ராமா ராவ், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பாஜக மக்களவை உறுப்பினர்களான பண்டி சஞ்சய் குமார், அரவிந்த். சோயம் பாபுராவ் உள்ளிட்ட 2,229க்கும் அதிகமான வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
» உத்தராகண்ட் சுரங்க விபத்து | ஆட்களால் துளையிடும் பணிகள் விரைவில் தொடங்கும்: அதிகாரிகள் தகவல்
பிஆர்எஸ் vs காங்கிரஸ் vs பாஜக: முதல்வரும், பிஆர்எஸ் தலைவருமான கேசிஆர் கஜ்வெல் மற்றும் கமாரெட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதேபோல் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி கோடங்கல் மற்றும் கமாரெட்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். பாஜக அதன் எம்எல்ஏவான எட்லா ராஜேந்தரை அவர் வெற்றி பெற்ற தொகுதியான ஹுசுராபாத்துக்கு பதிலாக கஜ்வெல் தொகுதியில் நிறுத்துகிறது.
பிரச்சாரம் நிறைவு: கடந்த அக்.9ம் தேதி அறிக்கப்பட்ட 5 மாநிலத்தேர்தல்களில் தெலங்கானாவே மிக நீண்ட பிரச்சார நாட்களைக்கொண்டிருந்தது. அதன் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பரபரப்பான பிரச்சாரங்கள்: “பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரே முதல்வர்'': தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி மூன்று நாட்களாக ஒரு டஜன் கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். தனது ஆதரவாளர்களின் மத்தியில் திங்கள்கிழமை மேற்கொண்ட பிரச்சாரத்தில் பேசிய அவர், "தெலங்கானாவில் பாஜக புதிய வரலாறு படைக்க இருக்கிறது. இந்தத் தேர்தலின் மூலம் பாஜக முதல்முறையாக தெலங்கானாவில் ஆட்சி அமைக்க இருக்கிறது. அதற்கு பாஜகவை ஆசீர்வதிக்கவே, இங்கு நீங்கள் பெரும் எண்ணிக்கையில் இங்கு வந்திருக்கிறீர்கள். " தெலங்கானாவின் அடுத்த முதல்வர் பாஜகவைச் சேர்ந்தவர்தான் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். அதேபோல், பாஜகவும் உங்களுக்கு ஓர் உறுதியை அளிக்கிறது. பாஜகவின் முதல்வர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார்" என்று தெரிவித்தார்.
ரிது பந்து திட்டம் ஏற்படுத்திய சர்ச்சை: தெலங்கானாவில் விவசாய செலவுகளை சந்திக்கவும், பயிர் உற்பத்தியைப் பெருக்கும் வகையிலும் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு ‘ரிது பந்து’ திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு பருவத்துக்கும் தலா ரூ.5,000 என வருடத்துக்கு ரூ.10,000 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் இந்த ராபி பருவத்துக்காக தெலங்கானாவில் ‘ரிது பந்து’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க கேசிஆர் அரசுக்கு கொடுத்த அனுமதியை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை திரும்பப் பெற்றது.
இந்தத் திட்டம் குறித்து மாநில நிதியமைச்சர் வெளியிட்ட அறிக்கை மூலம் தேர்தல் நடத்தை விதிகள் மீறிப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியிருந்தது. முன்னதாக திட்டம் குறித்து ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்த அமைச்சர், திங்கள்கிழமை காலையில் பணம் பட்டுவாடா செய்யப்படும். விவசாயிகள் தங்களின் காலை உணவினை முடிப்பதற்கு முன்பாக அவர்களின் வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும் என்று தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
காங்கிரஸை சாடிய கவிதா: ‘ரிது பந்து’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி வழங்குவதை நிறுத்தக் கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ள பிஆர்எஸ் கட்சி எம்எல்சி கவிதா, “பழையக் கட்சியின் கேவலமான அரசியல் வெளிப்பட்டுள்ளது” என்று சாடியிருந்தார். முன்னதாக, ரிது பந்து திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுவதை பிஆர்எஸ் கட்சி அதன் தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிடக் கூடாது என்று அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது.
ஹைதராபாத் பெயர் மாற்றம்: அரசியல் கட்சிகளின் பரபரப்பான பிரச்சாரங்களுக்கு நடுவில், தெலங்கானா மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டி தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத்தின் பெயர் பாக்யநகர் என்று மாற்றப்படும் என்று திங்கள்கிழமை தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், யார் இந்த ஹைதர், அதன் பழைய பெயர் பாக்யநகர்; நிஜாம்களின் ஆட்சிக்காலத்தில் அந்தப் பெயர் ஹைதராபாத் என மாற்றப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் அதன் பழைய பெயரான பாக்யநகரே மீண்டும் சூட்டப்படும்" என்று தெரிவித்தார். முன்னதாக பாஜக முதல்வர்களான யோகி ஆதித்ய நாத்தும், ஹேமந்த பிஸ்வாவும் இதே கருத்தை தெரிவித்திருந்தனர்.
கவனம் ஈர்க்கும் சுயேட்சை வேட்பாளர்: பல தேர்தல்களம் கண்ட அனுபவம் மிக்க வேட்பாளர்களுக்கு மத்தியில் தெலங்கானாவின் கொல்லாபூர் தொகுதி சுயேட்சை வேட்பாளரான 26 வயது கர்னே ஸ்ரீஷா கவனம் ஈர்க்கிறார். இவர் பிஆர்எஸ் எம்எல்ஏ பீராம் ஹர்சவர்தன் ரெட்டி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜுபல்லி கிருஷ்ணா ராவ் ஆகியோரை எதிர்த்து களம் காணுகிறார். தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளர்கள் களம் காணுவது ஒன்றும் புதிதான விஷயம் ஒன்றும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கொல்லாபூர் தொகுதியில் 11 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். என்றாலும் எந்த வித பொருளாதார பின்னணி இல்லாமல் களம் காணும் ஸ்ரீஷாவுக்கு ஆயிரக்கணக்கான இளம் ஆண்கள், பெண்கள் மாணவர்கள், வேலையில்லாத இளைஞர்தள், என்ஜிஓ செயல்பாட்டாளர்கள், தெலங்கானாவில் உள்ள சமூகவலைதள பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் அளித்துவரும் ஆதரவு அவரை தேர்தல்களத்தில் தனித்து வெளிச்சமிட்டு காட்டுகிறது.
தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த ஆண்டின் கடைசி சட்டப்பேரவைத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago