வி.கே.பாண்டியன் பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ஒடிசாவில் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.கார்த்திகேய பாண்டியன் நேற்று முன்தினம் ஆளும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியில் இணைந்தார்.

தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன். 2000 ஆம் ஆண்டு குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற இவர் பஞ்சாப் மாநிலப் பிரிவின் ஐஏஎஸ் அதிகாரியானார்.

பிறகு ஒடிசா மாநில ஐஏஎஸ்அதிகாரி சுஜாதாவை மணமுடித்ததால், ஒடிசா மாநில அதிகாரியாக இடம்மாறினார். ஒடியா மொழித்திறனுடன் சிறந்த பணியின் காரணமாக அம்மாநில மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றிருந்தார் அதிகாரி பாண்டியன். இதனால், 2011 முதல் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக பணியாற்றினார்.

அப்போது இருவரின் நெருக்கம்வளர்ந்தது. இதனால் ‘நிழல்முதல்வர்’ என்று அழைக்கப்பட்டவரால், பிஜேடியின் சில தலைவர்கள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்ததும் நிகழ்ந்தது. இதன் உச்சமாக அதிகாரி பாண்டியன், கடந்தஅக்டோபர் 23-ல் ஐஏஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதற்கான கால அவகாச நாட்களையும் பொருட்படுத்தாமல், அவரது ராஜினாமாவை மத்திய அரசு இரண்டு நாட்களில் ஏற்றது.

இதையடுத்து ஒடிசா அரசின் முன்னோடி வளர்ச்சித் திட்டங்களின் தலைவராக கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார். இவரது மனைவி சுஜாதா கார்த்திகேயன், ஒடிசா மிஷன் சக்தி திட்டத்தின் ஆணையராகப் பணியாற்றுகிறார். இச்சூழலில், பலரும் எதிர்பார்த்த வகையில் வி.கே.பாண்டியன் நேற்று முன்தினம் பிஜேடியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். முதல்வரும் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் முன்னிலையில் அவர் பிஜேடியில் இணைந்தபோது, கட்சியின் மூத்த தலைவர்களும் உடனிருந்தனர்.

இதுகுறித்து பிஜேடியின் முக்கியத் தலைவரும் புரி தொகுதி எம்.பி.யுமான பினாங்கி மிஸ்ரா கூறும்போது, “கட்சி தலைவர் நவீன் ஆசியுடன் கட்சியில் இணைந்துள்ளார் வி.கே.பாண்டியன். இவருக்கான கட்சிப் பொறுப்பு பின்னர்அறிவிக்கப்படும். தனது ஐஏஎஸ் பணிக்காலத்தை போல் கட்சிக்கும் அவர் வெற்றியை தேடித் தருவார்என நம்புகிறோம். இவரது இணைப்பால், கட்சியின் மற்ற தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என்றார்.

அடுத்த வருடம் மக்களவைத்தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.இதில், ஆறாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற முதல்வர் நவீன்பட்நாயக் வாக்கு சேகரிக்க உள்ளார்.இதில் அவரது நம்பிக்கைக்குரியவரான, தமிழர் வி.கே.பாண்டியனுக்கு பிஜேடியில் மிக முக்கியப் பொறுப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE