கார்த்திகை பவுர்ணமி: வாரணாசிக்கு வருகை தந்த 70 நாடுகளின் தூதர்கள்!

By செய்திப்பிரிவு

வாரணாசி: கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு வாரணாசியில் நடைபெற்ற சிறப்பு கங்கா ஆரத்தியைக் காண 70 நாடுகளின் தூதர்கள் வருகை தந்தனர்.

கார்த்திகை மாத பவுர்ணமி தினமான இன்று வட மாநிலங்களில் தேவர்களின் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கலாச்சார நகரமாக அறியப்படும் வாரணாசியின் கரைகளில் இன்று அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதால், இதைக் காண 70-க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதர்களுக்கு வெளிவிவகாரத் துறை அமைச்சகம் அழைப்பு விடுத்தது.

வாரணாசியில் ஏற்கனவே ஜி20 மாநாடு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு ஆகிய சர்வதேச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, வாரணாசியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளைக் காண 70-க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று வெளிநாடுகளின் தூதர்கள் வாரணாசிக்கு வருகை தந்தனர். சிறப்பு விமானத்தில் வந்த அவர்களை அரசு அதிகாரிகள் இந்திய கலாச்சார முறைப்படி நெற்றியில் திலகம் இட்டும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர்.

இதனையடுத்து, அவர்கள் நமோ காட் எனப்படும் படித்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், அங்கு நடைபெற்ற கங்கா ஆரத்தி நிகழ்ச்சியை அவர்கள் கண்டு களித்தனர். இதனைத் தொடர்ந்து பட்டாசுகளைக் கொண்டு பல்வேறு விதமான வான வேடிக்கைகள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதோடு, அனைத்து படித்துறைகளிலும் ஆயிரக்கணக்கில் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு, வாரணாசியின் கங்கை படித்துறைகள் ஜொலி ஜொலித்தன. 70 நாடுகளின் தூதர்கள் வாரணாசியில் உள்ள கங்கைக் கரை படித்துரைக்கு வருகை தந்தது இதுவே முதல் முறை என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE