“உடைந்து போய் உள்ளேன்” - கூட்ட நெரிசலால் மாணவர்கள் உயிரிழந்த நிலையில் பாடகி நிகிதா காந்தி வருத்தம்

By செய்திப்பிரிவு

கொச்சி: கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரியில் இயங்கி வரும் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (CUSAT) வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் பாடகி நிகிதா காந்தி.

இந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டு விழாவை ஒட்டி நேற்றிரவு இசைக் கச்சேரி நடைபெற்றது. பிரபல பின்னணி பாடகி நிகிதா காந்தி பங்கேற்று இசைக் கச்சேரியை நடத்தினார். திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற இசைக் கச்சேரியை ரசிக்க ஏராளமான மாணவ, மாணவியர் குவிந்தனர். அரங்கம் நிரம்பியதால் வெளியே நின்றிருந்த மாணவ, மாணவியருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் முண்டியடித்து முன்னேறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

“கொச்சியில் நடந்த சம்பவத்தால் மனதளவில் உடைந்து போயுள்ளேன். இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை நான் அடையும் முன்பே இப்படியொரு துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்தது. இந்த துயரத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்” என நிகிதா காந்தி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஒரே இடத்தில் அதிகமானோர் திரண்டது நெரிசல் ஏற்பட காரணம் என தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE