பல்கலை. இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்: 4 மாணவர்கள் உயிரிழப்பு @ கொச்சி

By செய்திப்பிரிவு

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் இயங்கி வரும் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (CUSAT) வளாகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 55-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இவர்களுக்கு களமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் திறந்தவெளியில் நடைபெற்ற பாடகர் நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சியின்போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது மழை பொழிந்து உள்ளது. அதை தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக பல்கலைக்கழக துணைவேந்தர் சங்கரன் தெரிவித்தார். பல்கலைக்கழக கலை விழா அங்கு நேற்று தொடங்கியது.

இன்று (நவ.25) இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமல்லாது பிற கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் என சுமார் 2,000 பேர் பங்கேற்றுள்ளனர்.

“இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்து வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளனர். மழை பொழிந்த காரணத்தால் ஒரே நேரத்தில் அனைவரும் உள்ளே செல்ல முயன்றுள்ளனர். அப்போது சில மாணவர்கள் கீழே விழுந்துள்ளனர். அவர்கள் மீது மற்றவர்கள் ஏறி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்” என காவல் துறை கூடுதல் இயக்குநர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

“ஒரே வாயில் வழியாக மாணவர்கள் உள்ளே வரவும், வெளியேறவும் செய்ததே கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது. படிக்கட்டுகள் வழியாக உள்ளே சென்ற மாணவர்கள் முதலில் கீழே விழுந்தனர், தொடர்ந்து அங்கிருந்த பெரும் கூட்டம் அவர்களை மீண்டும் மீண்டும் மிதித்துள்ளனர்” என நகராட்சி கவுன்சிலர் பிரமோத் தெரிவித்துள்ளார்.

“பல்கலைக்கழக சம்பவத்தால் ஒட்டுமொத்த மாநிலமும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளது. உயிரிழந்த நான்கு மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவ், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து ஆகியோர் சம்பவ இடத்தில் கள நிலையை நேரடியாக ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை தாமதமின்றி தொடங்கும்” என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் சனிக்கிழமை அன்று மாலை 6.50 மணி அளவில் நடைபெற்றதாக நிகழ்விடத்தல் இருந்தவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE