“தெலங்கானாவில் பாஜகவுக்கு சாதகமான அலை” - பிரதமர் மோடி சொன்ன ‘லாஜிக்’

By செய்திப்பிரிவு

கமரெட்டி: “தெலங்கானா மக்கள் பிஆர்எஸ் அரசின் 9 ஆண்டு கால ஆட்சியால் சலிப்படைந்து விட்டனர். தற்போது அதிலிருந்து விடுதலை பெற விரும்புகிறார்கள். இந்த அலை தற்போது பாஜகவுக்கு சாதகமாக உள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், கமரெட்டியில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தெலங்கானாவில் மாற்றத்துக்கான அலை வீசுகிறது. தெலங்கானா மக்கள் பிஆர்எஸ் அரசின் 9 ஆண்டு கால ஆட்சியால் சலிப்படைந்து விட்டனர். தற்போது அதிலிருந்து விடுதலை பெற விரும்புகிறார்கள். இந்த அலை தற்போது பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. நாங்கள் என்ன வாக்குறுதி அளித்தாலும், அதைச் செய்வோம். எங்கள் சாதனையை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

நாங்கள் முத்தலாக்கை ஒழிப்போம் என்று உறுதியளித்தோம், அதைச் செய்தோம். 370 வது பிரிவு ரத்து செய்யப்படும், பெண்களுக்கு இடஒதுக்கீடு, ராமர் கோயில் கட்டுவோம் என உறுதியளித்தோம், அதுவும் நடந்து வருகிறது. தெலங்கானாவில் மஞ்சள் வாரியம் அமைப்போம் என வாக்குறுதி அளித்தோம், அதையும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. மதிகா சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை பாஜக புரிந்துகொள்கிறது. இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த குழு ஒன்று அமைக்கப்படவிருக்கிறது. இந்தப் பிரச்னைகள் குறித்து நேற்று டெல்லியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்” என்றார் பிரதமர் மோடி.

தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவுக்கு வாய்ப்பளிக்க தெலங்கானா மக்கள் ஆர்வமாக உள்ளனர். தெலங்கானாவில் நல்ல தொழில்நுட்பம் உள்ளது. ஆனால், பி.ஆர்.எஸ். அரசின் மோசமான ஆட்சியால், தெலங்கானா மாநிலம் உரிய இடத்தைப் பெற முடியவில்லை. தற்போது காலம் மாறி வருகிறது. பாஜக மீதான உங்கள் நம்பிக்கை தெலங்கானாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE