டேராடூன்: கிடைமட்டத்தில் துளையிட்டு வந்த ஆகர் இயந்திரம் பழுதடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பகுதிகள் கைகளால் துளையிட திட்டமிடப்பட்டுள்ளது என உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் கடந்த 12ம் தேதி மண் மற்றும் பாறைகள் சரிந்ததை அடுத்து, 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்கும் நோக்கில், சில்க்யாரா பகுதியில் உள்ள சுரங்கத்தின் நுழைவுப் பகுதி வழியாக இடிபாடுகளின் ஊடாக 800 மி.மீ. விட்டத்துக்கு துளையிடும் பணி நடைபெற்று வந்தது.
இதற்காக, பாறைகளை வேகமாக குடையும் அமெரிக்காவின் ஆகர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது. 46 மீட்டர் அளவுக்கு குடையப்பட்டு, உள்ளே உள்ள தொழிலாளர்களை வெளியே அழைத்து வர இரும்பு பைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் 10 சதவீத துளையிடும் பணி மட்டுமே எஞ்சி இருந்தது. இந்நிலையில், நேற்றிரவு திடீரென அந்த இயந்திரத்தின் பிளேடுகள் உடைந்து இயந்திரம் பழுதடைந்து உள்ளே சிக்கிக் கொண்டது. இதனால், தற்போது துளையிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக முயற்சியை முன்னெடுக்க இரண்டு வாய்ப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன. முதல் வாய்ப்பாக, மீதமுள்ள பகுதிகளை துளையிட, உள்ளே சிக்கி உள்ள ஆகர் இயந்திரத்தை முதலில் வெளியே எடுக்க வேண்டும். இதற்காக, ஹைதராபாத்தில் உள்ள இரும்பை வெட்டும் இயந்திரத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகர் இயந்திரத்தை வெளியே எடுத்த பிறகு, துளையிடும் பகுதியை கைகளால் துளையிட வேண்டும். இவ்வாறு கைகளால் துளையிடுவதால், இயந்திரத்தைக் கொண்டு துளையிடுவதை விட கூடுதலாக 18 - 24 மணி நேரம் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.
» உத்தராகண்ட் சுரங்க மீட்பு பணி | ஆகர் இயந்திரம் பழுதடைந்ததை அடுத்து செங்குத்தாக துளையிட திட்டம்
இரண்டாவது வாய்ப்பாக, மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக புதிதாக துளையிடுவது. இதற்கான இயந்திரமும் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை துளையிடும் பகுதியில் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், கிடைமட்டமாக துளையிடுவதற்கே முதல் முன்னுரிமை கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நேரில் பார்வையிட்ட முதல்வர்: சுரங்கத்தின் நுழைவுப் பகுதி உள்ள சில்க்யாராவுக்கு இன்று வருகை தந்த உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மீட்புப் பணிகள் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மீட்புப் பணி எவ்வளவு சிரமத்துக்கும் சவால்களுக்கும் மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிவார்கள். மிக நெருக்கமாக சென்ற நிலையில், இயந்திரம் பழுதடைந்து உள்ளே சிக்கிக் கொண்டுள்ளது. நாளை காலைக்குள் இயந்திரம் வெளியே எடுக்கப்பட்டு விடும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அதன் பிறகு, மீதமுள்ள பகுதியை கைகளால் குடைய திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் பரிசீலித்து நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஆகர் இயந்திரத்தை வெட்டி எடுக்க ஹைதராபாத்தில் இருந்து பிளாஸ்மா இயந்திரத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மத்திய, மாநில அரசுகளின் அனைத்து அமைப்புகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொருவரும் அவரவர் உழைப்பை அளித்து வருகின்றனர். மீட்புப் பணிகளையும், தொழிலாளர்களின் உடல் நிலையையும் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார். மீட்புப் பணிகள் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். உள்ளே சிக்கி இருப்பவர்களை வெளியே அழைத்து வருவதற்கு உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி நாங்கள் அவர்களை வெளியே அழைத்து வருவோம்" என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
29 mins ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago