உத்தராகண்ட் சுரங்க மீட்பு பணி | ஆகர் இயந்திரம் பழுதடைந்ததை அடுத்து செங்குத்தாக துளையிட திட்டம்

By செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 கட்டுமானத் தொழிலாளர்களை மீட்க 14-வது நாளாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்க இன்னும் 10-12 மீட்டர் துளையிடும் பணி மட்டுமே எஞ்சியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 பேரை மீட்கும் பணி 14வது நாளாக இன்றும் தொடர்கிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு குழாய் வழியாக ஆக்சிஜன், உணவு, நீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் உடைந்து, பழுதடைந்துவிட்டதால், இனி அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கைகளால் துளையிடும் (manual drilling) இயந்திரத்தைப் பயன்படுத்தி துளையிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளே இருப்பவர்களை நெருங்க இன்னும் 10-12 மீட்டர் துளையிடும் பணி மட்டுமே எஞ்சியுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

இதனிடையே, மாற்றுத் திட்டமாக, சுரங்கப்பாதையின் மேலிருந்து குடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த பின்னணியில், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, நிகழ்விடத்துக்கு விரைந்துள்ளார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் குறித்தும் அதிகாரிகள் அவருக்கு விளக்கினர்.

41 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை உரிய ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் இருந்து வெளியேறும்போது எந்த தவறும் ஏற்படாமல் இருக்க திறமையான மருத்துவர்களின் குழு அங்கேயே தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தை விசாரித்த விசாரணைக் குழு, சுரங்கப்பாதையில் அவசரகால வெளியேற்றம் இல்லை (emergency exit) என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை மீட்க ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் வரவழைக்கப்பட்டு உள்ளார். இவர் சம்பவ இடத்துக்கு வந்த பிறகே மீட்புப் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் இது குறித்து அவர் பேசுகையில், "தொழிலாளர்களை மீட்க பல வழிகள் உள்ளன. இது ஒரு வழி மட்டுமல்ல. தற்போது எல்லாம் நன்றாகவே உள்ளது. ஆகர் (இயந்திரம்) பழுதடைந்துவிட்டது. இனி அதை சரிசெய்ய முடியாதது. அதன்மூலம் துளையிடவும் முடியாது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE