டீப்ஃபேக் தொழில்நுட்ப பிரச்சினை - சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு 7 நாட்கள் கெடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டீப்ஃபேக் தொழில்நுட்ப பிரச்சினையில் சமூக வலைதளங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை 7 நாட்கள் கெடு விதித்துள்ளது.

டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான முறையில் வீடியோ, புகைப்படங்களில் ஒரு நபரை தவறாக சித்தரிப்பது அல்லது ஆள்மாறாட்டம் செய்வதாகும். சமீபத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராஷ்மிகா மந்தனா, கஜோல் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளை தவறாக சித்தரித்து போலி வீடியோக்கள் வெளியாகின. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று கூறியதாவது: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படும் டீப்ஃபேக் போன்ற செயலிகள், இணையத்தை பயன்படுத்தும் 120 கோடி இந்தியர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. எனவே, டீப் ஃபேக் போன்ற தொழில்நுட்பங்கள், போலி தகவல்கள் பரவுதல் போன்றவற்றை கட்டுப்படுத்த விரைவில் புதிய சட்டம் உருவாக்கப்படும். தவறான தொழில்நுட்பங்களை கொண்டு சமூக வலைதளங்களில் பரவும் போலி தகவல்கள் குறித்து விசாரிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்)பதிவு செய்யவும் நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கான ஏற்பாடுகளை மத்திய மின்னணுவியல், தகவல்தொழில்நுட்பத் துறை செய்யும்.

இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களுக்கு 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் புகார் பதிவு செய்ய இணையதளம் உருவாக்கப்படும். விதிகள் மீறப்படுவது குறித்து பயனர்களுக்கு தெரிவிக்கவும், எஃப்ஐஆர் பதிவு செய்வதில் அவர்களுக்கு உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE