தொழிலாளர்களை நெருங்க இன்னும் 15 மீட்டர் மட்டுமே... - தேசிய பேரிடர் மீட்புக் குழு தீவிரம் @ உத்தராகண்ட்

By செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 கட்டுமானத் தொழிலாளர்களை மீட்க 13-வது நாளாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்க இன்னும் 15 மீட்டர் துளையிடும் பணி மட்டுமே எஞ்சியுள்ளது என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 கட்டுமானத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் எதிர்பாராத தடைகளால் பணி தாமதமாகி வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளுக்குள் 800 மிமீ விட்டம் கொண்ட குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, அதன்வழியாக, உள்ளே சிக்கி இருப்பவர்களை வெளியே அழைத்து வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் குழாய் வழியாக அவர்களே தவழ்ந்து வருவார்கள் என கூறப்பட்ட நிலையில், தற்போது சக்கரங்கள் பொறுத்தப்பட்ட ஸ்ட்ரெச்சர்கள் மூலம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான ஒத்திகையை NDRF இன்று மேற்கொண்டது.

அமெரிக்க ‘ஆகர்’ இயந்திரத்தில் நேற்று தொழில்நுட்பக் கோளாறால் துளையிடும் பணி தாமதமானதாக தகவல் வெளியானது. அந்த இயந்திரம் சரி செய்யப்பட்டதாகவும், ஆனால் பணி தொடங்க சற்று நேரம் ஆகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், விரைவில் மீட்புப் பணிகள் மீண்டும் தீவிரம் அடையும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரம்: தொழிலாளர்களை மீட்க இன்னும் 15 மீட்டர் துளையிடும் பணி மட்டுமே எஞ்சியுள்ளது. அதாவது, தலா 6 மீட்டர் நீளமுள்ள இரண்டு குழாய்கள் பதிக்க வேண்டும். முதல் 6 மீட்டர், 51-52 மீட்டரை எட்டும் அதன்பிறகு எங்களால் எளிதாக தொழிலாளர்களை எட்ட முடியும் என்று மூத்த அதிகாரிகளும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் தெரிவித்துள்ளது. மேலும் 'இந்தியாவின் மகன்களை' காப்பாற்ற மாநில மற்றும் மத்திய அரசுகள் ஒத்துழைத்து வருகின்றன என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எனத் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் முதல்வர் பி.எஸ்.தாமி, சுரங்கப்பாதை மீட்புப் பணியை ஆய்வு செய்தார். அதன் பிறகு மீட்புப் பணியின் கடைசிக் கட்டப் பணியை வேகமாகவும், முழு எச்சரிக்கையுடனும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

என்ன நடந்தது? உத்தராகண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம் தேதி மண் சரிந்தது விழுந்தது. இதன் காரணமாக சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று தொழிலாளர்களைத் தொட்டு விடும் தூரத்தில் மீட்பு குழுவினர் 46.8 மீட்டர் தூரம் துளையிட்டிருந்த நேரத்தில் ஆகர் துளையிடும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் வியாழக்கிழமை இரவு மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்வதற்காக மினி ட்ரோன்கள் மற்றும் ரோபோக்களை பயன்படுத்த டிஆர்டிஓ முயற்சி செய்தது. இந்த நிலையில், துளையிடும் பணிகளுக்கு மத்தியில் ஆகர் இயந்திரம் வியாழக்கிழமை பழுதடைந்ததால் மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனிடையே, சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களின் மன அழுத்தங்களைப் போக்குவதற்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் விவரித்துள்ளனர். இது குறித்து மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் இருக்கும் மனநல மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் ரோகித் கோண்ட்வால் கூறுகையில், “உள்ளே இருக்கும் தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க நாங்கள் அவர்களுக்கு லுடோ, செஸ் மற்றும் சீட்டுக் கட்டுகளை வழங்க முடிவு செய்தோம். பல்வேறு காரணங்களால் மீட்புப் பணிகள் தாமதமாகி வருகின்றன. உள்ளே இருப்பவர்கள் தங்களின் மன அழுத்தத்தைப் போக்க திருடன் - போலீஸ் விளையாட்டு விளையாடுவதாகவும், யோகா செய்வதாகவும் எங்களிடம் கூறினர்" என்று தெரிவித்தார். மற்றொரு மருத்துவ நிபுணர் கூறுகையில், “உள்ளே சிக்கி இருப்பவர்களின் மனோதிடம் அதிமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். அதற்காக, அவர்களுடன் மருத்துவக் குழு ஒன்று தினமும் பேசி, அவர்களின் மனோதிடம் மற்றும் ஆரோக்கியம் பற்றி கேட்டறியப்படுகிறது” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE