தெலங்கானா தேர்தலுக்கு 35,000 வாக்கு சாவடிகள்: மாநில தேர்தல் ஆணையர் தகவல்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு, 35,635 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் விகாஸ் ராஜ் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்து செய்து வருகிறது.

இந்நிலையில், தெலங்கானாமாநில தேர்தல் ஆணையர் விகாஸ்ராஜ் நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சட்டப்பேரவை தேர்தல் செலவுகளை 60 பேர் கொண்ட குழு பரிசீலனை செய்யும். தெலங்கானா மாநிலத்தில் 18 வயது பூர்த்தியாகி பதிவு செய்த புதிய வாக்காளர்கள் 9.9 லட்சம் பேர் உள்ளனர். வாக்குப்பதிவுக்கு செல்லும் அரசுபணியாளர்கள் ஏற்கனவே தங்களின் வாக்குகளை தபால் வாக்குகளாக பதிவு செய்து விட்டனர். 36 ஆயிரம் வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

35,635 வாக்குச் சாவடிகள் வாக்குப்பதிவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்முறை புதிதாக 51 லட்சம் வாக்காளர் அட்டைகள் தபால் துறை மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. முதியோருக்காக ‘ஹோம் வோட்டிங்’ முறை அமல்படுத்தப்படுகிறது. ஆதலால் 80 வயது நிரம்பியவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்கு சேகரிக்கப்படும். வாக்காளர்கள் வாக்களிக்கும் இடங்கள் குறித்த விவரம் அடங்கிய துண்டு சீட்டுகள்ஏற்கனவே 80 சதவீதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தெலங்கானா மாநில தேர்தல் ஆணையர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE