ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவ வீரர்கள் உயிரிழப்பு 5 ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 24 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் நேற்று கொல்லப்பட்டனர். மோதலில் காயம் அடைந்த வீரர் ஒருவர் நேற்று உயிரிழந்ததால், இந்த மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ரஜவுரி மாவட்டம், பஜிமல் என்ற கிராமத்தில் உணவு தராததால் கிராமவாசி ஒருவரை தீவிரவாதிகள் தாக்கியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கிராமத்தை ஒட்டியுள்ள கலகோட் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் காலையில் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

இதில் பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. வனப் பகுதியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டனர். இதில் நேற்று முன்தினம் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

இதையடுத்து அங்கு கூடுதல் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, 24 மணி நேரத்துக்கும் மேலாக மோதல் நீடித்தது. இந்நிலையில் இந்த மோதலில் நேற்று 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

முக்கிய தீவிரவாதி: இதுகுறித்து நேற்று ஜம்முவில்ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி காரி என அடையாளம் காணப்பட்டார். லஷ்கர் அமைப்பில் உயர் பொறுப்பில் இருந்த காரி, காஷ்மீரில் தீவிரவாதத்தை புதுப்பிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். வெடிகுண்டுகள் தயாரிப்பதில் கைதேர்ந்த இவர், நன்கு பயிற்சி பெற்ற ஸ்னைபர். பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் பயிற்சி பெற்றுள்ளார்.

கடந்த ஓராண்டாக ரஜவுரி – பூஞ்ச் நெடுகிலும் தனது குழுவுடன் வன்செயல்களில் ஈடுபட்டு வந்தார். டாங்கி, கண்டி தாக்குதல்களுக்கு இவர் மூளையாக செயல்பட்டிருக்கலாம் என கருதுகிறோம்” என்றார்.

இதனிடையே தீவிரவாதிகள் தாக்குதலில் காயம் அடைந்த வீரர் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இறந்த ராணுவ வீரர்களில் 2 கேப்டன்கள், 2 ஹவில்தாரும் அடங்குவர். மேலும் இந்த ஐவரில் 3 பேர் சிறப்பு கமாண்டோ படையை சேர்ந்தவர்கள் ஆவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE