“ரெட் டைரி’ காங்கிரஸ் கட்சியின் ஊழலின் அடையாளமாக மாறிவிட்டது” - அமித் ஷா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: "எல்லா துறைகளிலும் தோல்வியடைந்து வரும் காங்கிரஸ் அரசுக்கு ராஜஸ்தான் மக்கள் பிரியாவிடை அளிக்கும் எண்ணத்தில் உள்ளனர்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்படும். இந்த நிலையில், இம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை ஓய்வடைய உள்ளது. ராஜஸ்தானில் ஆட்சியைப் பிடிக்க பிரதமர் நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் இணைந்து சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த 6 மாதங்களாக நான் ராஜஸ்தானுக்கு வந்து செல்கிறேன். இந்த மாநிலத்தில் அடுத்து பாஜக ஆட்சியமைக்கும் என்பதை நம்பிக்கையுடன் கூற விரும்புகிறேன். மூலை முடுக்கெல்லாம் மக்கள் மத்தியில் மன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எல்லா துறைகளிலும் தோல்வியடைந்துவரும் காங்கிரஸ் அரசுக்கு ராஜஸ்தான் மக்கள் பிரியாவிடை அளிக்கும் எண்ணத்தில் உள்ளனர்.

ரெட் டைரி காங்கிரஸ் கட்சியின் ஊழலின் அடையாளமாக மாறிவிட்டது. இந்திய வரலாற்றில் இது மாதிரியான விசியங்கள் இதுவரை நடந்ததே இல்லை. அமைச்சர் அலமாரியில் ரூ.2.35 கோடி ரொக்கம் மற்றும் 1 கிலோ தங்கம் சிக்கியது. ஆனால் முதல்வர் அசோக் கெலாட்டிடம் இருந்து எந்தவித எதிர்வினையும் வரவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் சாப்ரா, பில்வாரா, கரௌலி, ஜோத்பூர், சித்தோர்கர், நோஹர், மேவாட், மல்புரா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் திட்டமிட்ட கலவரங்கள் நடந்துள்ளன. ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக கெலாட் அரசு கலவரக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரெட் டைரி (red diray) குறித்து அசோக் கெலாட்டிடம் மக்கள் கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் அதற்கு ஏன் பயப்படுகிறார்கள்?” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE