விஜயேந்திரா, அசோகா நியமன விவகாரம் | பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தி; எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக பாஜக தலைவராக விஜயேந்திராவையும், எதிர்க்கட்சி தலைவராக ஆர்.அசோகாவையும் தேர்ந்தெடுத்ததற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

கர்நாடகாவில் பாஜக மாநில தலைவர், எதிர்க்கட்சி தலைவர் ஆகிய பொறுப்புகளுக்கு கடந்த 6 மாதங்களாக ஆட்கள் நியமிக்கப்படவில்லை. நீண்ட இழுபறிக்கு பின்னர் கடந்த வாரத்தில் மாநிலத் தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமிக்கப்பட்டார். முதல் முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட இளம்தலைவரை பெரிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டதால் மூத்த தலைவர்கள் சோமண்ணா, பசனகவுடா யத்னால், ரமேஷ் ஜிகஜினகி, சி.டி.ரவி, ஷோபா கரந்தலாஜே அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதேபோல சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோகா நியமிக்கப்பட்டார். இதனால் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் அமைச்சர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே பாஜக மூத்த தலைவர்கள், ''தற்போதைய துணை முதல்வர் டி.கே.சிவகுமாரிடம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அசோகாவை நியமித்தது ஏன்?''என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் பெங்களூருவில் விஜயேந்திரா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் அசோகா, முன்னாள் அமைச்சர்கள் அரக ஞானேந்திரா, மாதுசாமி, பசனகவுடா யத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பசனகவுடா யத்னால், ''மாநிலத் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் ஆகிய பதவிகள் நியமனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இருவருமே தென்கர்நாடகாவை சேர்ந்தவர்கள். வடகர்நாடக தலைவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்'' எனக்கூறி, அரங்கத்தில் இருந்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ரமேஷ் ஜார்கிஹோளியும் வெளிநடப்பு செய்தார்.

இதுகுறித்து பசனகவுடா யத்னால் கூறுகையில், ''பாஜக ஒரு குடும்பத்துக்கு மட்டும் சொந்தமான கட்சி அல்ல. அசோகாவை மக்கள் ஏற்கவில்லை. அவரை ஏன் எதிர்க்கட்சி தலைவராக நியமித்தார்கள்? வட கர்நாடகா தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. அதற்காக நான் தொடர்ந்து குரல் எழுப்புவேன்''என்றார்.

இதனிடையே முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜிகஜினகி, ''பாஜகவில் தலித்துகளுக்கு முக்கியத்துவம் கிடையாது. செல்வந்தர்களுக்கும், சாதி செல்வாக்கு கொண்டவர்களுக்குமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த மோசமான நிலை என்றைக்கு மாறுமோ?'' என விமர்சித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் நியமனத்தில் மூத்த தலைவர்களுக்கு இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் அக்கட்சி மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. எனவே முன்னாள் முதல்வர் எடியூரப்பா மூலமாக அதிருப்தியாளர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE