உத்தராகண்ட் சுரங்கப் பாதை | 11 நாட்களாக சிக்கி தவிக்கும் 41 பேரை மீட்கும் பணி இறுதிகட்டம்

By செய்திப்பிரிவு

உத்தரகாசி: உத்தராகண்ட் சுரங்கப் பாதைக்குள் 51 மீட்டர் தூரத்துக்கு பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டு, மீட்பு பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அவர்களை வரவேற்கவும், தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சை வழங்கவும் அதிகாரிகள், மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணியை உத்தராகண்ட் சாலை,போக்குவரத்து துறை மேற்கொண்டது. இங்கு கடந்த 12-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டதால், சுரங்கப் பாதைக்குள் பணியாற்றிய 41 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கினர்.

இவர்களை மீட்கும் முயற்சிகள் கடந்த 11 நாட்களாக இரவு - பகலாக நடைபெற்று வருகிறது. சுரங்கத்துக்குள் சிறு துளை வழியாக எண்டாஸ்கோபி செலுத்தும் பணி நேற்று முன்தினம் வெற்றிகரமாக முடிவடைந்து, சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம்41 தொழிலாளர்களும் நல்ல நிலையில் உள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன.

இதையடுத்து, சுரங்கத்துக்குள் செலுத்தப்பட்ட 6 இஞ்ச் குழாய் மூலம் தொழிலாளர்களுக்கு சூடானஉணவுகள் நேற்று முன்தினம் முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மீட்பு பணி நேற்று இரவு இறுதிகட்டத்தை எட்டியது. இதுகுறித்து உத்தராகண்ட் சாலை போக்குவரத்து துறையின் மூத்த அதிகாரி மஹ்மூத் அகமது கூறியதாவது:

சுரங்கப் பாதைக்குள் ‘ஆகர்’ என்ற இயந்திரம் மூலம் 51 மீட்டர் தூரத்துக்கு குழி தோண்டும் பணி முடிந்துவிட்டது. தொழிலாளர்கள் 57 மீட்டர் ஆழத்தில் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ளனர். இன்னும் 6 மீட்டர் ஆழம் குழி தோண்டினால் சுரங்கப் பாதைக்குள் குழாய் மூலமாக வழி ஏற்படுத்திவிடலாம்.

இதற்காக இரும்பு குழாய்கள் வெல்டிங் செய்யப்பட்டு, தோண்டப்பட்ட குழிக்குள் இறக்கப்படுகின்றன. இந்த குழாய்களை வெல்டிங் செய்வது முக்கியமான பணி என்பதால் இதற்கு தாமதம் ஆகிறது.

பக்கவாட்டில் குழி தோண்டுவது சிரமம் அல்ல. 18 மீட்டர் குழாயை 15 பணி நேரத்துக்குள் 3 பிரிவுகளாக இறக்கிவிட்டோம். சுரங்கப் பாதைக்குள் கூடுதலாக 21 மீட்டர் ஆழத்துக்கு 800 எம்எம் குழாய் இறக்கப்பட்டுள்ளது.

எந்த தடையும் ஏற்படவில்லை என்றால், சுரங்கப் பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை நள்ளிரவு அல்லது அதிகாலைக்குள் மீட்டுவிடலாம்.

அடுத்தகட்ட பணி மிகவும் சிக்கலானது. குழி தோண்டும் போதுசுரங்கத்துக்குள் மண் விழும் என்பதால், இப்பணி மெதுவாக நடைபெற்றது. குழி தோண்டும் ஆகர் இயந்திரமும் அடிக்கடி பழுதானதால் மீட்பு பணி தாமதமானது. தற்போது சுரங்கப் பாதைக்குள் குழி தோண்டும் பணி இறுதிகட்டத்தை எட்டி விட்டது.வெகு விரைவில் தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மீட்பு பணியில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழகம் உட்பட அரசின் 5 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

தொழிலாளர்கள் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜன், குடிநீர் போதிய அளவில் உள்ளது.சுரங்கப் பாதைக்குள் மண் சரிவுஏற்பட்டபோதும், மின்தடை ஏதும்ஏற்படவில்லை. சுரங்கப் பாதைக்குள் மின்னொளி வெளிச்சமும் நன்றாக உள்ளது.

புலாவ், பனீர், சப்பாத்தி: சுரங்கப்பாதைக்குள் ஏற்கெனவே நுழைக்கப்பட்டுள்ள சிறு குழாய்கள் மூலம் நேற்று முன்தினம் இரவு ஆரஞ்சு மற்றும் வாழை பழங்கள் துண்டுகளாக வெட்டப்பட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. அத்துடன் 150 பாக்கெட் வெஜ் புலாவ், பனீர், பட்டர் சப்பாத்தி ஆகியவையும் அனுப்பப்பட்டன.

சுரங்கப் பாதைக்குள் இருந்து மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு தேவைப்பட்டால் உடனடி சிகிச்சை அளிக்க 8 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை, சுரங்கப்பாதைக்கு அருகே உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 15 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பல ஆம்புலன்ஸ் வாகனங்களும், ஒரு ஹெலிகாப்டரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் வருகை: தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியதால், மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி டேராடூனில் இருந்து உத்தரகாசி வந்துள்ளார்.

தொழிலாளர்களின் குடும்பத்தினரும் உத்தரகாசிக்கு வரவழைக்கப்பட்டு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொழிலாளர்களுடன் பேசி வருவது இரு தரப்பினருக்கும் ஆறுதலாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்