டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தமிழகம், க‌ர்நாடகா, கேரளா, புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் ,விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரப்பட உள்ளது.

காவிரி நதி நீரை தமிழகத்துக்கு திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. கடந்த அக்.30-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில்,நவ.22-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு2,600 கனஅடி நீரை திறக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்த போதும், தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டது. இதை கண்டித்து மண்டியாவில் கன்னட அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடக அணைகளில் போதிய நீர் இல்லை என்று மறுத்து வருகிறார்.

இந்நிலையில், காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.

காணொலி மூலமாக நடைபெறும் இந்தகூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகள், வானிலை ஆய்வு மையநிபுணர்கள், ஒழுங்காற்று குழு செயலர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இக்கூட்டத்தில், விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்க இருப்பதாக தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE