ராஜஸ்தானில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் ஆம் ஆத்மி - பிரச்சாரத்துக்கு கேஜ்ரிவால் செல்லாதது ஏன்?

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. இதன் தேசிய அமைப்பாளரான டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது. இதன் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. எனினும், கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லவில்லை. டெல்லி முதல்வரான இவரது கட்சி பஞ்சாபிலும் ஆட்சியை பிடித்துள்ளது. பஞ்சாபின் முதல்வரான பக்வந்த் மான் கடந்த ஜுன் 18-ல் கங்காநகர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு, முதல்வர் கேஜ்ரிவால் கடந்த செப்டம்பரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை ஜெய்பூரில் நடத்தினார்.

ராஜஸ்தான் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான நவீன் பாலிவால், புதிதாக அமர்த்தப்பட்டவர். தேர்தலுக்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சியின் மாநில பொறுப்பாளரான வினய் மிஸ்ரா, முதல்வர் அசோக் கெல்லோட் மீது கடும் விமர்சனங்களை எழுப்பியிருந்தார். ஆனால், இவரும் தேர்தல் சமயத்தில் அமைதி காத்து வருகிறார். இச்சூழலில், ஆம் ஆத்மி பிரச்சாரத்தில் தீவிரம் காட்டாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதற்கு முன் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் தட்டிப் பறித்தனர். இங்கு ஆம் ஆத்மியால் காங்கிரஸ் வேட்பாளர்கள் பலரும் சில ஆயிரம் வாக்குகளில் தோற்றனர். எனினும், ராஜஸ்தானில் ஆம் ஆத்மியின் பல தலைவர்கள் முதல்வர் அசோக் கெல்லோட்டிற்கு ஆதரவாகத் திரும்பியுள்ளனர். இதன் பின்னணியில் ஆம் ஆத்மி காங்கிரஸுக்கு மறைமுக ஆதரவளிப்பதாக ஒரு பேச்சு உள்ளது. மற்றொரு காரணமாக ஆம் ஆத்மியின் பல முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதும் கூறப்படுகிறது.

தேசிய அளவில் எதிர்கட்சிகள் அமைத்த இண்டியா கூட்டணியின் உறுப்பினராக ஆம் ஆத்மி உள்ளது. இண்டியா கூட்டணியாக இருந்தும் ஆம் ஆத்மியை போல், சமாஜ்வாதி உள்ளிட்ட இதர சில கட்சிகளும் ராஜஸ்தானில் போட்டியில் உள்ளனர். இதனால், இண்டியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்ற பேச்சும் உள்ளது.

டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவிற்குப் பின் அதன் நாடாளுமன்ற மாநிலங்களவையின் எம்பியான சஞ்சய்சிங்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மதுபான வரி விலக்கு அளித்த ஊழல் வழக்கில் முதல்வர் கேஜ்ரிவாலின் பெயரும் அடிபடத் துவங்கி உள்ளது. இதிலிருந்து தப்புவதில் முதல்வர் கேஜ்ரிவால் இறங்கியிருப்பதால் அவருக்கு ராஜஸ்தான் வர நேரம் இல்லை எனவும் ஒரு கருத்து நிலவுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE