“நாட்டின் பழங்குடி மக்களுக்கு காங்கிரஸ் ஒருபோதும் உதவியதில்லை” - பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

துங்கர்பூர்(ராஜஸ்தான்): நாட்டின் பழங்குடி மக்களுக்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் உதவியது கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு துங்கர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: ராஜஸ்தானில் இளைஞர்களின் கனவு நொறுங்கிப்போயுள்ளது. காரணம், காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சிதான். கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற அனைத்து அரசுப் பணிகளிலும் காங்கிரஸ் கட்சி ஊழல் செய்துள்ளது. இது இளைஞர்களுக்குச் செய்துள்ள மிகப் பெரிய அநீதி.

மோசமான ஆட்சியை தந்துள்ள காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவதற்கான மிகப் பெரிய வாய்ப்புதான் இந்த தேர்தல். ஜனநாயகம் உங்களுக்குக் கொடுத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பு இது. சில நேரங்களில் நாம் செய்யும் சிறு தவறுகூட அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதுபோல் இல்லாமல், நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் ஆட்சியை அகற்றி, பாஜக ஆட்சிக்கு வர வாக்களியுங்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் மிக வேகமாக ராஜஸ்தானில் அமலுக்கு வரும். காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்து பாஜக ஆட்சி தொடங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு எதிரானது. குறிப்பாக, நாட்டின் பழங்குடி மக்களுக்கு காங்கிரஸ் இதுவரை எந்த நன்மையையும் செய்யவில்லை. அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. ஆனால், பாஜக, பழங்குடி மக்கள் நலனுக்கு என தனி அமைச்சரவையே உருவாக்கியது. அதோடு, பட்ஜெட்டில் அவர்களுக்கு அதிக நிதியை ஒதுக்கியது.

ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். மக்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்படும். ராஜஸ்தான் அரசு ஊழியர்களை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது. அதிகாரிகளைச் சென்று சேர வேண்டிய பணம் அரசிடம் மாட்டிக் கொண்டுள்ளது. ஆனால், இது குறித்து எந்த விசாரணையும் இதுவரை நடைபெற வில்லை. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE