நேரு மாலையிட்டதால் ஒதுக்கி வைக்கப்பட்ட பழங்குடியின பெண் காலமானார்

By செய்திப்பிரிவு

தன்பாத்: கடந்த 1959-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, பிஹார் மாநிலம் (இப்போதைய ஜார்க்கண்ட்) தன்பாத் அருகில் தாமோதர் நதி மீது கட்டப்பட்ட பஞ்செட் அணையை திறக்கச் சென்றார்.

அப்போது அணை கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவரால் அணை திறக்கப்பட வேண்டும் என நேரு விரும்பினார். அதன்படி 16 வயது பழங்குடியினப் பெண் புத்னி மஞ்சியன் அணையை திறந்து வைத்தார். அப்போது புத்னிக்கு நேரு மாலை அணிவித்து கவுரவித்தார்.

அன்றிரவு சந்தாலி சமூகத்தினரின் பஞ்சாயத்து கூடியது. மலர் மாலைகள் பரிமாறப்பட்டதால் பழங்குடி மரபுகளின்படி நேருவை புத்னி திருமணம் செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் சந்தாலி சமூகத்தால் கிராமத்தில் இருந்து புத்னி ஒதுக்கி வைக்கப்பட்டார்.

இதையடுத்து மேற்கு வங்கத்தின் புரூலியாவில் உள்ள சால்டோராவுக்கு புத்னி குடிபெயர்ந்தார். அங்கு தினக்கூலி வேலை செய்த அவருக்கு சுதிர் தத்தா என்ற ஒப்பந்த தொழிலாளி அடைக்கலம் கொடுத்து, பிறகு அவரை திருமணம் செய்துகொண்டார்.

ராஜீவ் காந்தி பிரதமரான பிறகு 1985-ல் மேற்கு வங்கத்தின் அசன்சால் சென்றார். அப்போது புத்னி பற்றி அறிந்த ராஜீவ் அவரை சந்தித்தார். இதையடுத்து பஞ்செட் அணையை நிர்வகிக்கும் தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தில் (டிவிசி) புத்னிக்கு வேலை வழங்கப்பட்டது. 2005-ல் புத்னி ஓய்வுபெற்றார்.

இந்நிலையில் பஞ்செட் பகுதியில் தனது மகள் ரத்னாவுடன் ஒரு குடிசையில் வசித்து வந்த புத்னி தனது 80-வது வயதில் கடந்த 17-ம் தேதி காலமானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE