உத்தராகண்ட் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர்: கேமரா முன்பு பேசும் காட்சி வெளியாகியுள்ளது

By செய்திப்பிரிவு

உத்தரகாசி: உத்தராகண்டில் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பான முதல் வீடியோ வெளியாகியுள்ளது. விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே, சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ. சுரங்கப் பாதை அமைக்கும்பணி நடந்து வந்தது. அங்கு கடந்த 12-ம்தேதி மண் சரிவு ஏற்பட்ட நிலையில்,சுரங்கப் பாதைக்குள் வேலை செய்துகொண்டிருந்த 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது.

அவர்கள் என்ன நிலைமையில் உள்ளனர் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், மீட்பு குழுவினர்,எண்டாஸ்கோபி கேமராவை சுரங்கத்தினுள் செலுத்தி, தொழிலாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளனர். அந்த வீடியோ நேற்று வெளியானது.

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை ஒவ்வொருவராக கேமரா முன்புவரச்சொல்லி மீட்பு குழுவினர் அடையாளம் காண்பது அதில் பதிவாகியுள்ளது. ‘‘கவலைப்படாமல் இருங்கள். விரைவில் உங்களை மீட்டு விடுவோம்’’ என்று பேசி, அதிகாரிகள் அவர்களுக்கு நம்பிக்கையூட்டினர்.

இந்த வீடியோவை நேற்று வெளியிட்ட உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விரைவிலேயே தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

இந்த வீடியோ வெளியாகி இருப்பது, தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. மீட்பு பணியிலும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழாய் மூலம் சூடான உணவு: தொழிலாளர்கள் சுவாசிப்பதற்காக கடந்த 12-ம் தேதி முதல் குழாய் வழியாக தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. மற்றொரு 4 அங்குல குழாய் வழியாக உலர் பழங்கள், குடிநீர், மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சற்று அகலமான 6 அங்குல குழாய் தற்போது வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது. அதன்மூலம் தொழிலாளர்களுக்கு சூடான உணவுப் பொருட்கள் முதல்முறையாக வழங்கப்படுகிறது. நேற்று அந்த குழாய் மூலம்கிச்சடி, பருப்பு கடையல் (தால்) உள்ளிட்டவை அனுப்பப்பட்டன. அவர்களுக்கு விரைவில் செல்போன், சார்ஜர்கள் வழங்கப்படும் என்று மீட்பு பணிகள் பொறுப்பு அதிகாரி கர்னல் தீபக் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி விசாரிப்பு: சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பது தொடர்பாக மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் மோடி தினமும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்றும் அவர் முதல்வரை தொடர்பு கொண்டு தொழிலாளர்களின் நிலைமை குறித்தும் மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

‘எண்டாஸ்கோபி கேமரா மூலம் தொழிலாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருப்பதையும், அவர்களுக்கு 6 அங்குல குழாய் மூலம் உணவு வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்தேன்’ என்று, முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

மீட்பு பணி குறித்து தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் இயக்குநர்அன்ஷும் கல்கோ கூறும்போது, “சுரங்கப் பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். தற்போது முதல்வெற்றி கிடைத்துள்ளது. கேமரா மூலம்தொழிலாளர்களை தொடர்புகொண்டிருப்பது, மீட்பு பணியில் மிக முக்கியமான முன்னகர்வு. அவர்களை மீட்பதற்கு தேவையான உபகரணங்கள் அதிகஎடை கொண்டவை என்பதால், விமானம்மூலம் கொண்டுவர முடியவில்லை. தரை வழியாக விரைவில் அனைத்தும் இங்கு வந்து சேரும்” என்று தெரிவித்தார்.

தொழிலாளர்கள் உருக்கம்: சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுடன் மீட்பு பணி அதிகாரிகள் தொடர்ந்து உரையாடி வருகின்றனர். தொழிலாளர்கள் பேசுவது பதிவு செய்யப்பட்டு அவர்களது குடும்பத்தினருக்கு அனுப்பப்படுகிறது.

ஜெய்தேவ் என்ற தொழிலாளர் நேற்று அனுப்பிய குரல் பதிவில், “தயவுசெய்து நான் பேசுவதை பதிவு செய்யுங்கள். நான் என் அம்மாவிடம் ஒன்று சொல்ல வேண்டும்.. அம்மா, பயப்படாதீர்கள். நான் நலமாக இருக்கிறேன். நீங்களும் அப்பாவும் நேரத்துக்கு சாப்பிடுங்கள்” என்று கலங்கியபடி கூறினார். மீட்பு அதிகாரிகள், அவரது குரலை பதிவு செய்து, அவரது பெற்றோருக்கு அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்