சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு கிச்சடி உணவு: தகவல் தொடர்புக்காக வாக்கி-டாக்கி

By செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி இந்த சுரங்கப்பாதையில் மண் சரிந்தது. அதனால் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு கிச்சடி உணவு மற்றும் தகவல் தொடர்புக்காக வாக்கி டாக்கியும் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, பக்கவாட்டில் இயந்திரம் மூலம் துளையிட்டு மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில் செங்குத்தாக துளையிட்டு தொழிலாளர்களை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 12-ம் தேதி முதல் தொழிலாளர்கள் சுவாசிப்பதற்காக குழாய் வழியாக தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. மற்றொரு குழாய் வழியாக உணவு பொருட்கள், குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. திரவ உணவு மற்றும் உலர் பழங்கள், மருந்துகள் வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் முதல் முறையாக தொழிலாளர்களுக்கு சுடச்சுட உணவு அனுப்பட்டுள்ளது. கிச்சடி மற்றும் டால் (பருப்பு) அனுப்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு 750 கிராம் வீதம் கிச்சடி தயாரித்து அனுப்பியுள்ளதாக சமையல் கலைஞர் தெரிவித்துள்ளார். ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் லெமன் ஜூஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாளை முதல் மேலும் பல உணவுகள் அனுப்படும் என தெரிவித்துள்ளார்.

உள்ளே சிக்கி உள்ள தொழிலாளர்களுடன் தகவல் தொடர்பு மேற்கொள்ள வாக்கி டாக்கி அனுப்பி உள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார். சிக்கியுள்ள தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட மேலும் 5 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE