காங்கிரஸ் அரசின் மோசமான நிர்வாகம் காரணமாக ராஜஸ்தானில் பணவீக்கமும் வேலையின்மையும் அதிகரிப்பு: பிரதமர் மோடி விமர்சனம்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் அரசின் மோசமான நிர்வாகம் காரணமாக ராஜஸ் தானில் பணவீக்கமும் வேலை யின்மையும் அதிகரித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 25-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நேரடி போட்டியாக பாஜகதீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது. பாஜக முக்கிய தலைவர்கள் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, சுரு மாவட்டம் தாராநகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இப்போது நாட்டு மக்கள் அனைவரும் கிரிக்கெட் உற்சாகத்தில் மூழ்கி உள்ளனர். கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரு அணியைச் சேர்ந்த பேட்ஸ்மேன்கள் தங்கள் அணிக்காக ரன் குவிப்பதில் ஈடுபடுவார்கள். ராஜஸ்தான் காங்கிரஸும் கிரிக்கெட் அணியைப் போன்றதுதான். ஆனால், ஒரே கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஒருவரை ஒருவர் ரன் அவுட் செய்ய முயற்சிப்பது போல செயல்படுகின்றனர்

கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியும் இப்படி ஒருவரை ஒருவர் ரன் அவுட் செய்வதிலேயே முடிந்துவிட்டது.

காங்கிரஸ் கட்சி எப்போதும் வளர்ச்சிக்கு எதிரானதாகவே இருக்கும். காங்கிரஸுக்கும் நல்ல நோக்கத்துக்கும் இடையிலான உறவு என்பது வெளிச்சத்துக்கும் இருட்டுக்கும் இடையிலான உறவு போன்றது.

‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ (ஓஆர்ஓபி) திட்ட அமலாக்க விவகாரத்தில் முன்னாள் ராணுவ வீரர்களை காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்துகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் அரசின் மோசமான நிர்வாகம் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் பணவீக்கமும் வேலையின்மையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. விவசாயிகளையும் கூட விட்டுவைக்கவில்லை.

உரத்தில் ஊழல்: ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதும் உரத் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனாலும் நம் நாட்டு விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் மலிவான விலையில் உரம் வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், இதிலும் ராஜஸ்தான் அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளது.

எனவே, ஊழல் இல்லாத அரசு அமையவும் மாநிலத்தின் வளர்ச்சியை உறுதி செய்யவும் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE