மேற்கு வங்கத்தில் மோசமான சாலையால் பரிதாபம்: கட்டிலில் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மால்தங்கா கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் வராததால், கயிற்றுக் கட்டிலில் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ளது மால்தங்கா கிராமம். இங்கு வசித்த மமோனி ராய்(25) என்ற பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. கிராமத்தில் உள்ள வைத்தியரிடம் நாட்டு மருந்து வாங்கி கொடுத் துள்ளனர். இதில் காய்ச்சல் குணமடையவில்லை. அவரது உடல் நிலை மோசமானதால், அவரது கணவர் கார்த்திக் ராய் ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளார்.

மால்தங்கா கிராமத்தில் சாலை மிக மோசமாக இருப்பதால், அங்கு ஆம்புலன்ஸ் மற்றும் வாடகை வாகனத்தை ஓட்டிச் செல்ல ஓட்டுனர்கள் மறுத்துவிட்டனர். இதனால் கார்த்திக் ராய் மற்றும் உறவினர்கள் மமோனி ராயை கட்டிலில் படுக்க வைத்து நாலரைகி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மமோனி ராய் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மமோனி ராய் கட்டிலில் தூக்கிச் செல்லப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

மாவட்ட அதிகாரி விளக்கம்: இது குறித்து கருத்து தெரிவித்த மால்டா மாவட்ட அதிகாரி, ‘‘ஆரம்பத்தில் முறையான சிகிச்சை மேற்கொள்ளாமல் ஆபத்தான நிலையில் மமோனி ராய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது மிகவும் துரதிர்ஷ்டமான சம்பவம். ஆம்புலன்ஸ்வசதிக்கு, குடும்பத்தினர் மாவட்டநிர்வாகத்தினரை தொடர்பு கொண்டிருக்கலாம். இச்சம்பவம் குறித்துவிசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது’’ என்றார்.

மேற்கு வங்க கல்வி அமைச்சர் சித்திக்குல்லா சவுத்திரி இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘‘மோசமான சாலை வசதியால் அந்த பெண் இறக்கவில்லை. இறக்க வேண்டும் என்பது அவரது விதி’’ என கூறினார்.

மார்க்சிஸ்ட் கண்டனம்: இந்த அலட்சிய பதிலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சூஜன் சக்ரவர்த்தி, ‘‘இது போல் கருத்து தெரிவித்ததற்காக அமைச்சர் வெட்கப்பட வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும். இவரெல்லாம் அமைச்சரா? மம்தா இன்னும் முதல்வராக நீடிக்க வேண்டும் என்பதுவிதி. இனி மேலும் அவர் ஆட்சியில்நீடிக்க மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE