“பாரத் மாதா கி ஜெய்க்கு பதிலாக..” - அதானியை வைத்து பிரதமர் மோடியை சாடிய ராகுல் காந்தி 

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: பிரதமர் மோடி 24 மணிநேரமும் தொழிலதிபர் அதானிக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அதானிக்காக பிரதமர் வேலை செய்வதால் அவர் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்பதற்கு பதிலாக, ‘அதானி ஜி கி ஜெய்’ என்று சொல்ல வேண்டும் என்று கூறினார்.

ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணிக் கூட்டத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தான் பாரத மாதா; நாட்டில் இவர்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படும் போது பாரத மாதாவுக்கு ஜெயத்தை உண்டாகும்.

ஆனால் பிரதமர் மோடி பணக்கார்களுக்கு ஓர் இந்தியா, ஏழைக்களுக்கு ஓர் இந்தியா என இரண்டு இந்தியாக்களை உருவாக்க விரும்புகிறார். என்ன நடந்தாலும் மோடி ஒருபோதும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த மாட்டார். ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் அதைச் செய்வார்கள்" இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

பாஜக அரசால் அதானி குழுமம் அதிக ஆதாயம் அடைந்துள்ளதாக தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் காங்கிரஸ் கட்சி, அதானி குழுமம் குறித்த அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE