ராஜஸ்தான் | நின்று கொண்டிருந்த லாரி மீது போலீஸ் வாகனம் மோதி விபத்து: 5 காவலர்கள் பலி, இருவர் காயம்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது போலீஸ் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 போலீஸார் உயிரிழந்தனர்; 2 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து குறித்து சுரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் நாயக் கூறுகையில், "இந்த விபத்து சுஜாங்கர் சதார் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. விபத்தில் சிக்கிய போலீஸார் தேர்தல் கூட்டத்துக்கான பாதுகாப்பு பணிக்காக சென்று கொண்டிருந்தனர். விபத்தில் இறந்தவர்கள், கின்வாஸ்ரா காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏஎஸ்ஐ ராமச்சந்திரா, காவலர்கள் கும்பாராம், சுரேஷ் மீனா, தனராம், மகேந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளது" என்றார்.

இதனிடையே, விபத்தில் இறந்த காவலர்களுக்கு மாநில முதல்வர் அசோக் கெலாட் தனது இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று அதிகாலை, சுரு மாவட்டம், சுஜாங்கர் சதார் பகுதியில் நடந்த விபத்தில் 5 காவலர்கள் இறந்த சோகமான செய்தி கிடைத்தது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE