கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக அசோகா தேர்வு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகவில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 66 இடங்களை பெற்று தோல்வி அடைந்தது. முதல்வராக சித்தராமையா பதவியேற்று 6 மாதங்கள் ஆகியும் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்யாமல் பாஜக மேலிடம் அமைதி காத்து வந்தது.

அடுத்த மாதம் பெலகாவியில் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவரை நியமிக்க வேண்டும் என பாஜகவினர் கோரி வந்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் துணை முதல்வர் அசோகா எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

லிங்காயத் பிரிவைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா அண்மையில் பாஜகவின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் ஒக்கலிகா தலைவர்களை சமாதானப்படுத்த, அப்பிரிவைச் சேர்ந்த அசோகா எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE