இந்திய ராணுவத்துக்காக சென்னை எம்ஐடி தயாரித்த ட்ரோன்கள்: மலை பகுதிகளில் உணவு கொண்டு செல்ல உதவும்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய ராணுவத்துக்காக மலை பகுதிகளில் உணவு கொண்டு செல்ல உதவும் ட்ரோன்களை சென்னை எம்ஐடி நிறுவனம் தயாரித்துள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் (எம்ஐடி) மேம்பட்ட வான்வெளி ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் இயங்கி வரும் கலாம் மேம்பட்ட ஆளில்லா விமான ஆராய்ச்சி மையம், நவீனதொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ட்ரோன் எனப்படும் ஆளில்லாவிமானங்களை வடிவமைத்து இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக அனுப்பி வைத்தது.

அந்த வகையில் சுமார் 500ட்ரோன்களை இந்திய ராணுவத்துக்கு அண்ணா பல்கலைக்கழக எம்ஐடி நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. இந்த ட்ரோன்களை நாட்டின் வட கிழக்கு மாநிலங்களின் எல்லை பகுதிகள் மற்றும் மலை பகுதிகளில் உள்ள எளிதாக அணுக முடியாத இடங்களில் இந்திய ராணுவம் பயன்படுத்தவுள்ளது.

இதையொட்டி உயர்ந்த மலைப்பகுதிகளான லே, லடாக், அடர்ந்தகாடுகள், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மலைப் பகுதிகள், வெப்பம் அதிகம் இருக்கும் பொக்ரான் ஆகிய இடங்களில் ட்ரோன் சோதனைகள் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

இதுதொடர்பாக எம்ஐடி நிறுவனத்தின் பேராசிரியர்கள் கூறும்போது, “இந்த ஆளில்லா விமானங்கள், கடும் பனி, மழை மற்றும் வேகமான காற்று வீசும்போதுகூட பயன்படுத்தும் வகையிலும், 1 கி.மீ. உயரம் வரை பறக்கக்கூடிய விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 100 கிலோ எடை கொண்ட இந்த ட்ரோன்கள், 15 முதல்20 கிலோ வரையிலான மருந்துகள்,உணவு, எண்ணெய் பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு 20 கி.மீ. வரை எடுத்துச் செல்லும் திறன் கொண்டவை.” என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE