வலுவிழந்தது மிதிலி புயல் - ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வங்கக் கடலில் உருவான மிதிலி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் கடந்த செவ்வாய்க்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறியது. இதற்கு `மிதிலி' எனப் பெயரிடப்பட்டது. நேற்று மிதிலி புயல் ஒடிசாவின் பாரதீப்புக்கு கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் தாகாவிலிருந்து தென்கிழக்கே 200 கி.மீ. தொலைவிலும், வங்கதேசத்தின் கெபுபாராவிலிருந்து தென்மேற்கே 220 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

இந்நிலையில், மிதிலி புயல் இன்று (சனிக்கிழமை) காலை வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது. கரையைக் கடந்த புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இதனால், நேற்று கனமழையால் பாதிக்கப்பட்ட திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்று மழை பெய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிசோரமில் வானம் தெளிவாக இருந்ததாகவும், அதே சமயம் திரிபுராவில் மேகமூட்டமான சூழல் நிலவியதாகவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இருந்தபோதும் இன்று அதிகாலையில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் எந்த ஒரு புதிய மழையும் பெய்யவில்லை என்றும், மழைச் சேதங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திரிபுராவின் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE