ம.பி.யில் ரூ.300 கோடி மதிப்புள்ள மதுபானம், போதைப் பொருட்கள், ரூ.40 கோடி ரொக்கம் பறிமுதல்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

By செய்திப்பிரிவு

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 9-ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து ரூ.40.18 கோடி ரொக்கம் மற்றும் மதுபானங்கள், போதைப்பொருள்கள், நகைகள் என கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கு மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அனுபம் ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து அமலாக்கத்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வந்ததனர்.

இந்தச் சோதனையின் மூலம், பறக்கும் படை (எஃப்எஸ்டி), கண்காணிப்புக் குழு (எஸ்எஸ்டி) மற்றும் காவல்துறையினர் இணைந்து சட்டவிரோத மதுபானங்கள், போதைப் பொருட்கள், தங்கம், வெள்ளி நகைகள் என விலை உயர்ந்த உலகோங்கள் என மொத்தம் ரூ.339.35 கோடி மத்திப்புள்ள பொருட்களை கைப்பற்றினர்.

அக்.9-ம் தேதி முதல் நவ.16-ம் தேதி வரை நடந்த இந்தக் கூட்டுச் சோதனையில், ரூ.40.18 கோடி ரொக்கம், ரூ.65.56 கோடி மதிப்புள்ள 34.68 லிட்டர் சட்டவிரோத மதுபானங்கள், ரூ.17.25 கோடி மதிப்புள்ள போதை பொருள்கள், ரூ.92.76 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் பிற விலையுயர்ந்த உலோகங்கள், ரூ.124.18 கோடி மதிப்புள்ள பிற பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலின் போது, இதேப் போன்று நடத்தை விதிகள் அமலில் இருந்த போது, மொத்தம் ரூ.72.93 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் மற்ற பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

முன்னதாக, தனக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்தன, வாக்காளர்களை கவரும் வகையில் மதுபானம் மற்றும் பணம் விநியோகிக்கப்படுவதைக் காட்டும் வீடியோ காட்சியும் வந்துள்ளதாக மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் குற்றம்சாட்டியிருந்தது கவனிக்கத்தக்கது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவைகளுக்கும் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக
தேர்தலும் நடைபெற்றது. மத்திய பிரதேசத்தில் 71.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE