காஷ்மீர் என்கவுன்ட்டரில் 5 தீவிரவாதிகள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

குல்காம்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து காஷ்மீர் போலீஸார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தபயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர், சிஆர்பிஎஃப் மற்றும் உள்ளூர் போலீஸார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, போரா பகுதியில் சாம்னோ பாக்கெட் என்ற இடத்தில் மறைந்திருந்த தீவிர வாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இரு தரப்புக்கும் இடையில் நீண்டநேரம் நீடித்த இந்த சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து முக்கியப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

எல்லைக்கு அப்பால் இருந்து மேலும் சில தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருவதால் சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

முன்னதாக, நவம்பர் 15-ம் தேதியன்று உரி செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நடைபெற்ற தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்தது.

இந்த நிலையில் குறுகிய இடைவெளியில் ராணுவம் மீண்டுமொரு தாக்குதல் நடத்தி 5 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE