“தேர்தலின்போது ‘காங்கிரஸ் புயல்’ வீசுவதை தெலங்கானா பார்க்கும்” - ராகுல் காந்தி

By செய்திப்பிரிவு

ஐதராபாத்: சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான புயல் வீசுவதை தெலங்கானா பார்க்கப் போகிறது என்றும், ஆளும் பிஆர்எஸ் மோசமாக தோல்வியடையப் போகிறது என்றும் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கம்மம் மாவட்டம் பினபாக்காவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், "தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான புயல் வரப் போகிறது. கே.சந்திரசேகர ராவும், அவரது கட்சியும் இதுவரை பார்க்காத புயலாக அது இருக்கும். இதனை கே.சி.ஆர் உணர்ந்துள்ளார். காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்று கே.சி.ஆர் கேட்கிறார். அவருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், நீங்கள் படித்த பள்ளி மற்றும் கல்லூரியை உருவாக்கியதே காங்கிரஸ்தான். நீங்கள் பயணித்த சாலைகளை உருவாக்கியதும் காங்கிரஸ்தான்.

தெலுங்கானா இளைஞர்களின் ஆதரவை காங்கிரஸ் பெற்றுள்ளது. தெலங்கானாவை தனி மாநிலமாக மாற்றுவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றி, ஹைதராபாத்தை உலகின் தகவல் தொழில்நுட்பத் தலைநகராக மாற்றியது காங்கிரஸ்தான். தெலங்கானாவின் முக்கிய பிரச்சினையே, நிலச்சுவான்தாரர்களுக்கும், மக்களுக்கும் இடையே இருக்கும் சண்டைதான். மதுபானம், மணல் உட்பட பணம் கொழிக்கும் அனைத்து துறைகளும் 'முதல் குடும்பத்தின்' கைகளில் உள்ளன.

தனி மாநிலம் வேண்டும் என்றபோது, அந்த தெலங்கானா மக்களுக்கானதாக இருக்கும் என மக்கள் கனவு கண்டனர். ஆனால் ஒரே ஒரு குடும்பத்தின் கனவை மட்டும் கேசிஆர் நிறைவேற்றி வருகிறார். அவரது ஊழலின் சின்னங்கள் தெலங்கானாவின் ஒவ்வொரு மூலையிலும் காணப்படுகின்றன. காலேஸ்வரம் தடுப்பணை திட்டம் என்ற பெயரில் மக்களிடமிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பிஆர்எஸ், பாஜக மற்றும் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள் ஓரணியில் உள்ளன. பாஜகவுக்கு உதவுவதற்காக காங்கிரஸ் எங்கு தேர்தலில் போட்டியிடுகிறதோ அங்கெல்லாம் ஒவைசி கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்துகிறது. காங்கிரஸுக்கும் பிஆர்எஸ்ஸுக்கும் இடையே தேர்தல் போர் நடைபெற்று வருகிறது. தேர்தலில் பிஆர்எஸ்-க்கு பாஜக, ஏஐஎம்ஐஎம் கட்சிகள் உதவுகின்றன. தெலங்கானா மக்களுக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள முக்கிய 6 வாக்குறுதிகள், நிச்சயமாக நிறைவேற்றப்படும். அவை நரேந்திர மோடியின் வெற்று வார்த்தைகள் அல்ல. தெலங்கானாவில் மக்கள் ஆட்சி அமைப்பதே எங்களின் முதல் நோக்கம். அதன் பிறகு மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசை அகற்றுவோம்" என்று ராகுல் காந்தி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE