பிரியங்கா காந்தி Vs ஜோதிராதித்ய சிந்தியா - வார்த்தைப் போரில் ‘பாடி ஷேமிங்’!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரியங்கா காந்திக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் நாளுக்கு நாள் வார்த்தைப் போர் நீடித்து வரும் நிலையில், அதில் ‘பாடி ஷேமிங்’ எனப்படும் உருவக்கேலியும் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. உத்தரப் பிரதேசத்தில் 'உயரமான' தலைவர்களுக்கு ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது என காங்கிரஸ் கட்சியை ஜோதிராதித்ய சிந்தியா இப்போது விமர்சனம் செய்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் தாட்டியா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜக-வுக்குச் சென்ற ஜோதிராதித்ய சிந்தியாவை கடுமையாக விமர்சித்தார். "ஜோதிராதித்ய சிந்தியா உயரம் குறைந்தவர். ஆனால், கர்வம் மிக்கவர். உத்தரப் பிரதேசத்தில் அவரோடு நான் பணியாற்றி இருக்கிறேன். அவரைப் பார்க்கச் செல்பவர்கள் அவரை மகாராஜா என்று அழைக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் சென்ற காரியம் வெற்றி பெறாது” எனப் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். இதற்குத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ள சிந்தியா, "பிரியங்கா காந்தி ஒரு பகுதி நேர அரசியல்வாதி” என விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், ஓர் ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டியளித்த ஜோதிராதித்ய சிந்தியா, “உத்தரப் பிரதேசத்தில் 'உயரமான' (பிரியங்காவின் `உயரம்' குறித்தக் கருத்தைக் குறிப்பிட்டு) தலைவர்களுக்கு ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது. சிலர் தங்களை மிகவும் 'உயரமான' தலைவர்களாகக் கருதுகிறார்கள், மேலும் அவர்களுக்கு உ.பி-யிலுள்ள 80 தொகுதிகளில், ஓர் இடத்தில் மட்டுமே வெற்றி கிடைத்தது. பிரியங்கா காந்தி மீது எனக்கு எந்தவித வெறுப்பும் கிடையாது. அவருக்கு நான் எனது பதிலை அளித்துவிட்டேன். மக்களுக்கு நல்லது செய்யவும், அவர்களின் நம்பிக்கையையும், அன்பையையும் பெறக் கடவுள் உங்களுக்கு மிகக் குறைந்த கால அவகாசத்தையே அளித்துள்ளார். நாங்கள் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பதில் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. மத்தியப் பிரதேச மக்கள் எங்களை ஆசீர்வதிப்பார்கள் என்று நான் மிகவும் நம்புகிறேன்” என்றார்.

பின்னணி என்ன: 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார். இதன் பிறகு, 2019 ஆம் ஆண்டு பிரியங்கா காந்திக்கு அகில இந்தியப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதோடு, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பொறுப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார். அப்போது முதல் பிரியங்கா காந்தி காங்கிரஸ் சார்பாக அனைத்து பிரச்சாரங்களையும் முன்னெடுத்து நடத்தி வருகிறார்.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தாலும்கூட, சோனியா காந்தி மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் ரேபரேலி (Rae Bareli) தொகுதியில் வெற்றி பெற்றார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சோனியா காந்தி ஒருமுறை மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்காகப் பிரியங்கா காந்திதான் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஸ்மிருதி இரானியை எதிர்த்து அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE