“மகனுக்காக அதிகார துஷ்பிரயோகம்” - டெல்லி தலைமைச் செயலர் மீது ஆம் ஆத்மி அரசு குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் அரசின் டெண்டர்களை அவரது மகன் பெறும் வகையில் விதிகளுக்கு புறம்பாக நடந்துள்ளார்” என்று ஆம் ஆத்மி அரசு கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லி தலைமைச் செயலர் நரேஷ் குமார் ரூ.850 கோடிக்கு நில மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் அதிஷி ஏற்கெனவே முதல்வரிடம் அறிக்கை அளித்திருந்தார். இந்த நிலையில், தலைமைச் செயலாளர் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை விளக்கி மீண்டும் ஒரு துணை அறிக்கையை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் அவர் சமர்ப்பித்துள்ளார். அந்தத் துணை அறிக்கையில், “நரேஷ் குமாரின் மகன் கரண் சவுகானின் நிறுவனமான மெடாமிக்ஸ், டெல்லி ஐஎல்பிஎஸ் மருத்துவமனையிடமிருந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (ஏஐ) அடிப்படையில் மென்பொருளை உருவாக்குவதற்கான வேலையை பெற்றுள்ளது. இதற்காக எந்தவிதமான ஒப்பந்தப் புள்ளிகளும் கோரப்படாமல் மெடாமிக்ஸுக்கு அந்த வேலை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.

நரேஷ் குமார் மகனுடயை நிறுவனம் ஏழு மாதங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மென்பொருள் உருவாக்குவதில் அந்நிறுவனத்துக்கு எந்தவிதமான அனுபவமும் கிடையாது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நரேஷ் குமாரை அவரது பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், மெடாமிக்ஸ் நிறுவனத்துக்கும் ஐஎல்பிஎஸ் மருத்துவமனைக்கும் இடையிலான ஒப்பந்தத்தை ரத்து செய்து இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்” என்று அமைச்சர் அதிஷி கூறியுள்ளார்.

ஐஎல்பிஎஸ் சொசைட்டியின் விவகாரங்கள் ஒரு நிர்வாகக் குழுவின் உத்தரவுகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்பபடுகின்றன. இந்த நிர்வாக குழுவில் சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவத் துறையினர் போன்றோர் ஒரு தலைவரின் கீழ் இயங்குகின்றனர். இதன் தலைவராக தலைமைச் செயலாளரே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, டெல்லி சேவைகள் மற்றும் விஜிலென்ஸ் துறை அமைச்சர் அதிஷி செவ்வாய்க்கிழமை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அறிக்கை ஒன்றை அளித்திருந்தார். அதில் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் அவரது மகனுக்கு சொந்தமான நிறுவனத்துக்காக ரூ.850 கோடி அளவில் நில மோசடி ஊழலில் ஈடுப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். மொத்தம் 670 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட விரிவான விசாரணை அறிக்கையில், துவாரகா விரைவுச் சாலை திட்டத்துக்காக பாம்னோலி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்திய நிலத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், தலைமைச் செயலாளர் தனது மகன் தொடர்புடைய நிறுவனம் பயனடையும் வகையில் நிலத்தின் மதிப்பினை 22 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

மேலும், தலைமைச் செயலாளர் தனது மகன் கரண் சவுகான் தொடர்புடைய பல நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்களை வழங்கியதாகவும், விரைவு சாலைத் திட்டத்தின் மூலம் பயனடையும் நில உரிமையாளர்களுடன் கரண் சவுகானுக்கு வணிகத் தொடர்புகள் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததது. இந்தக் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு டெல்லி அரசு வியாழக்கிழமை பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE