பெண்களுக்கு மாதம் ரூ.2,500, இலவச பஸ் பயணம் - தெலங்கானாவில் காங்கிரஸின் 6 முக்கிய வாக்குறுதிகள்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானாவில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட 6 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது. தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் வாக்குறுதிகள்: மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 நிதி உதவி வழங்கப்படும். காஸ் சிலிண்டரின் விலை ரூ.500-க்கு விற்கப்படும். அரசுப் பேருந்துகளில் மாநிலம் முழுவதும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் நிதி உதவி ஆண்டுதோறும் வழங்கப்படும். குத்தகை விவசாயிகளுக்கும் இதேபோல் உதவி வழங்கப்படும். விவசாய கூலிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். நெல்லுக்கு குவிண்ட்டாலுக்கு ரூ.500 போனசாக வழங்கப்படும். கிரக ஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட இலவசமாக நிலம் வழங்கப்படும். வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். மாணவர்கள் தங்களின் கல்லூரி கட்டணத்தைக் கட்டுவதற்காக ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். தெலங்கானா தனி மாநில போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு 750 சதுர அடி நிலம் வழங்கப்படும். மூத்த குடிமக்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள், பீடி சுற்றும் தொழில் செய்பவர்கள், தனியாக வாழும் பெண்கள், நெசவாளர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். ரூ.10 லட்சம் மதிப்புள்ள சுகாதார காப்பீடு வழங்கப்படும்.

மல்லிகார்ஜுன கார்கே பேச்சு: தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “சமூக நீதி மற்றும் பொருளாதார சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. தெலங்கானாவை உருவாக்கியவர்கள் நாங்கள். கமிஷன் ஆட்சியில் மக்கள் துன்பப்பட விட்டுவிட மாட்டோம். கர்நாடகா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியவர்கள் நாங்கள். அதேபோல், தெலங்கானா மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்” என தெரிவித்தார்.

தெலங்கானா தேர்தல்: வரும் 30-ம் தேதி தெலங்கானாவில் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அப்போதைய தெலங்கானா ராஷ்ட்ர சமிதி, தற்போதைய பாரத் ராஷ்ட்ர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பதிவான மொத்த வாக்குகளில் 47.40% வாக்குகளை அக்கட்சி பெற்றது. காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாம் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE