''பிரியங்கா காந்தி வத்ரா ஒரு பகுதி நேர அரசியல்வாதி'' - ஜோதிராதித்ய சிந்தியா பதிலடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரியங்கா காந்தி வத்ரா ஒரு பகுதிநேர அரசியல்வாதி என்று பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா விமர்சித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. தாட்டியா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி வத்ரா, காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்குச் சென்ற ஜோதிராதித்ய சிந்தியாவை கடுமையாக விமர்சித்தார். "ஜோதிராதித்ய சிந்தியா உயரம் குறைந்தவர். ஆனால், கர்வம் மிக்கவர். உத்தரப் பிரதேசத்தில் அவரோடு நான் பணியாற்றி இருக்கிறேன். அவரைப் பார்க்கச் செல்பவர்கள் அவரை மகாராஜா என்று அழைக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் சென்ற காரியம் வெற்றி பெறாது. ஜோதிராதித்ய சிந்தியாவின் குடும்ப பாரம்பரியம் அப்படி. அவர்கள்பலர் முதுகில் குத்தி இருக்கிறார்கள். ஆனால், இவர், குவாலியர் மக்களின் முதுகில் குத்தியவர். அவர் ஒரு துரோகி” என பிரியங்கா காந்தி வத்ரா குற்றம் சாட்டினார்.

இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ள சிந்தியா, சீனாவுக்கு நேரு இந்திய நிலத்தின் ஒரு பகுதியை கொடுத்ததையும், இந்திரா காந்தி அவரச நிலையை பிரகடனப்படுத்தியதையும் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார். "பிரியங்கா காந்தி பகுதி நேர அரசியல்வாதியாக இருப்பதால் அவருக்கு இரண்டு பாரம்பரியங்கள் குறித்து புரிந்து கொள்ளும் திறன் இருக்கவில்லை. சிந்தியா பாரம்பரியம் என்பது, முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரிடம் இருந்து இந்த நாட்டை காக்க உயிர்த்தியாகம் செய்தது. இன்னொரு பாரம்பரியம் இருக்கிறது. அது இந்தியாவின் நிலப் பகுதியை சீனாவுக்கு பரிசாகக் கொடுத்தது. அதோடு, சுயநலத்திற்காக நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியது. இதோடு மட்டும் நிற்கவில்லை, தற்போதும் கூட அதன் அடுத்த தலைமுறை வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் இந்தியாவின் புகழைக் கெடுக்க முயல்கிறது. குவாலியர் அரச வம்சம் குறித்தும் அதன் பாரம்பரியம் குறித்தும் சரியாக அறிந்து கொள்ளாமல் பிரியங்கா காந்தி வத்ரா பேசி இருக்கிறார்" என குற்றம் சாட்டி இருக்கிறார்.

ஜோதிராதித்ய சிந்தியாவின் இந்த கருத்துக்கு பதில் அளித்துள்ள மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், "காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியையும், சிவராஜ் சிங் சவுகானையும் கடுமையாக விமர்சித்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. தற்போது பாஜகவில் இருப்பதால், அவர் பேசிய அந்த பேச்சுக்கள் மறைந்துவிடாது" எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE