மணிப்பூர் மைத்தேயி இன அமைப்புகளுக்கு தடை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மைத்தேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டு,இனக் கலவரமாக மாறியது. இதில் 178 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பிரிவினைவாத மற்றும் வன்முறை செயல்பாடுகள் காரணமாக பல்வேறு மைத்தேயி தீவிரவாத அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. 1967-ம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்புகள், மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர், காவல் துறை மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது மற்றும் கொலை செய்வதுடன் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மத்திய அரசு கருதுகிறது.

மக்கள் விடுதலைப் படை (பிஎல்ஏ) மற்றும் அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணி (ஆர்பிஎப்), ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (யுஎன்எல்எப்) மற்றும் அதன் ஆயுதப் பிரிவான மணிப்பூர் மக்கள்படை (எம்பிஏ), காங்லீபாக் மக்கள் புரட்சிகர கட்சி, அதன் ஆயுதப் பிரிவான சிவப்பு ராணுவம் என்கிற காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகளை சட்ட விரோத அமைப்புகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவிலிருந்து மணிப்பூரை பிரித்து சுதந்திர தேசத்தை நிறுவுவதும், மணிப்பூரின் பழங்குடியினரை அத்தகைய பிரிவினைக்குதூண்டுவதும் நோக்கமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE