சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராயை பரோலில் விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

By செய்திப்பிரிவு

சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராயை பரோல் அல்லது இடைக்காலப் பிணையில் விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது

சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய், அந்நிறுவன இயக்குநர்கள் ரவிசங்கர் துபே, அசோக் ராய் சவுத்ரி ஆகிய மூவரும் கடந்த மார்ச் 4-ஆம் தேதி முதல் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முதலீட்டாளர்களுக்கு ரூ.24,000 கோடி பணத்தை திருப்பித் தராத வழக்கில், அவர்களை ஜாமீனில் விடுவிக்க ரூ.10,000 கோடியை முதலீடு செய்யும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இத்தொகையை திரட்ட வெளிநாடுகளில் உள்ள மூன்று ஓட்டல்களை விற்பனை செய்ய வேண்டும். அதற்காக சுப்ரதா ராயை வெளியில் விட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நியூயார்க் மற்றும் லண்டனில் உள்ள அவரது ஹோட்டல்களை விற்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

இம்மனு நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், அனில் தவே, ஏ.கே.சிக்ரி அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. சுப்ரதா ராயை பரோலில் விடுவிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். சொத்துக்களை விற்பது குறித்து உருப்படியான திட்டத்துடன் அணுகினால், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விற்பனைக்கான பேரம் நடத்த போலீஸ் காவலுடன் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், சுப்ரதா ராய் மற்றும் அவரது நிறுவன இயக்குனர்கள் இருவரும் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE